கர்நாடக அரசு முன்மொழிந்துள்ள மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, "மேகதாது அணை தடுப்போம்! காவிரி காப்போம்!" என்ற முழக்கத்துடன், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., ஜூலை 1 முதல் 4-ஆம் தேதி வரை பிலிகுண்டுலு முதல் பூம்புகார் வரை நான்கு நாள் விழிப்புணர்வு பரப்புரை பயணத்தை மேற்கொள்கிறார்.
காவிரி ஆறு தமிழ்நாட்டில் நுழையும் இடமான பிலிகுண்டுலுவில் நாளை (ஜூலை 1-ந் தேதி) காலை 10 மணிக்கு அன்புமணி காவிரி ஆற்றை பார்வையிடுகிறார். அதனைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு ஒகேனக்கல்லில் விழிப்புணர்வு பயணத்தை தொடங்கி, நண்பகல் 12 மணிக்கு பென்னாகரம் பஸ் நிலையம் அருகே துண்டுப் பிரசுரங்களை வழங்கி, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பரப்புரை கூட்டத்தில் உரையாற்றுகிறார். மாலை 4 மணிக்கு தருமபுரி ராஜகோபால் கவுண்டர் பூங்காவில் இருந்து பி.எஸ்.என்.எல். அலுவலகம் வரை விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கியபடி பேரணியாக சென்று, பின்னர் நடைபெறும் பரப்புரை கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் உரையாற்ற உள்ளார்.
மேகதாது அணைத் திட்டத்தை தடுத்து, காவிரி நதியின் நீர்வரத்தை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் இந்த நான்கு நாள் விழிப்புணர்வு பயணம் நடைபெறுகிறது.