சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி பள்ளிக் கல்வித்துறை புதுமைகளை முன்னெடுத்துச் செல்லும் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கல்வியில் திட்டமிடல், நிர்வாகம் மற்றும் கல்வி சார்ந்த கட்டமைப்புகளை தொடர்ந்து மேம்படுத்தி கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகின்றது.
தமிழர்தம் வரலாற்றுத் தொன்மை, பண்பாட்டு விழுமியங்கள், வாழ்வியல் மதிப்புகளை நன்குணர்ந்து எதிர்கால சமுதாயம் ஏற்றமுறும் வகையில் இன்றைய மாணவ தலைமுறை அறிவாற்றலைப் பெறவும், வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுப்பதற்கான கற்றல் அனுபவங்களைப் பெற்றிடும் வகையிலும் தரமான கல்வியை தமிழ்நாடு அரசு தொடர்ந்து அளித்து வருகிறது.
மாணவர்களின் வளர்ச்சியை முன்னுரிமையாகக் கொண்டு, பள்ளிக் கல்வித்துறை பள்ளி கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.), ரோபோட்டிக்ஸ், நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள், திறன் வகுப்பறைகள் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறது.
மேலும், மாணவர்களை மையமாகக் கொண்டு கற்றல் சூழலை உருவாக்கும் விதமாக இல்லம் தேடிக் கல்வி, வாசிப்பு இயக்கம், எண்ணும் எழுத்தும், மொழிப் பாடத்திறன் மற்றும் கணிதத்திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் பொருட்டு "திறன்" இயக்கம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினால் பள்ளிகளுக்கு மாண வர்கள் குறித்த நேரத்தில் வருவது அதிகரித்துள்ளது டன், மாணவர்களிடம் கற்றல் ஆர்வம், வகுப்பறைக் கவனிப்பு, நினைவாற்றல், விளையாட்டில் முன்னேற்றம் போன்றவை ஏற்பட்டு உள்ளது என மாநில திட்டக் குழுவின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு கல்வி சுற்றுலா, ஆசிரியர் திறன் மேம்பாடு, புதுமைப் பெண், தமிழ்புதல்வன், நான் முதல்வன் போன்ற திட்டங்கள், "நம்ம ஊரு நம்ம பள்ளி" மூலம் அரசுப் பள்ளிகளுக்கு தனியார், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தொழிற் நிறுவனங்கள் மூலம் உட்கட்டமைப்பு வசதிகள், கழிப்பறைகள், டிஜிட்டல் கல்வி, பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் சுகாதாரத் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன.
மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், கணித உபகரணப் பெட்டிகள், மிதிவண்டிகள் வழங்கி மாணவர்களின் கல்வித்திறனை மேலும் வலுப்படுத்துகின்றன.
இந்தியாவிலேயே பள்ளிக் கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சியினை வெளிப்படுத்தும் விதமாக சென்னையிலுள்ள மெரினா கடற்கரையில் சிலை அமைக்க திட்டமிடப்பட்டு, அதன்படி, ரூ.1 கோடியே 43 ஆயிரம் செலவில் தமிழ்நாடு பாட நூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மூலமாக அமைக்கப்பட்டுள்ள "கற்றனைத் தூறும் அறிவு" சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ.வேலு, மு.பெ. சாமிநாதன், பி.கே. சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யா மொழி, மேயர் பிரியா, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் லியோனி, பள்ளிக் கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திரமோகன், மேலாண்மை இயக்குநர் ஆர்த்தி, சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் நே.சிற்றரசு, பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.