தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்றைய (ஆகஸ்ட் 11) சட்டமன்ற கூட்டத்தொடரில் நீட் தேர்வு மற்றும் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்ட (எஃப்.சி.ஆர்.) திருத்த மசோதா ஆகியவற்றுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தனித்தீர்மானம் கொண்டுவருகிறது.
2026-27ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 3-ஆவது நாளாக சட்டப்பேரவையில் இன்று (செவ்வாய் கிழமை) தொடர்ந்து நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில், மத்திய அரசு நடத்தி வரும் நீட் தேர்வை திரும்ப பெற்று மாநில மருத்துவ பாடத்திட்ட மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் தனித் தீர்மானத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் தாக்கல் செய்ய உள்ளார்.
நீட் தேர்வில் இருந்து தமிழ் நாட்டிற்கு விலக்கு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதாவை கடந்த 2021-இல் தமிழக சட்டப்பேரவை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. எனினும், இந்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் அப்போது ஒப்புதல் அளிக்கவில்லை.
தொடர்ச்சியாக நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளால் மருத்துவ கனவு கொண்ட லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இது தொடர்பாக உயிரிழப்பு ஏற்பட்டும் நாடு முழுவதும் உள்ள மாணவர்களின் நம்பிக்கையை இந்தத் தேர்வு இழந்துள்ளது. ஆகையால், நீட் தேர்வை அகற்ற வேண்டும் என அமைச்சர் அருண்ராஜ் கோர உள்ளார்.
இதேபோல், வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத் திருத்த மசோதாவை தற்போதைய வடிவில் திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் தனித் தீர்மானத்தை பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தாக்கல் செய்ய உள்ளார்.
இந்தத் தீர்மானங்களின் மீது விவாதம் இன்றே நடத்தப்பட்டு மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. முன்னதாக நேற்று நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.