மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை முறியடிக்க சட்டசபையில் இன்று தமிழக அரசின் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிகிறார்.
மேகதாது அணை தொடர்பான அரசினர் தனித்தீர்மானம் இன்றுசட்டசபையில் கொண்டு வரப்படுகிறது.
அந்த தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிகிறார். அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்பட எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது என மத்திய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது.
காவிரிப்பிரச்சனை, தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களின் உணர்வுபூர்வமான பிரச்சனையாகும். எனவே கர்நாடக அரசு மேகதாதுவிலோ அல்லது காவிரிப்படுகையில் வேறு எந்த இடத்திலோ அணை அல்லது எவ்வித புதிய நீர்த்தேக்க திட்டத்தை, பிற படுகை மாநிலங்களின் இசைவு இல்லாமலும், மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமலும் மேற்கொள்ளக்கூடாது என கர்நாடக அரசை அறிவுறுத்துமாறு மத்திய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது.
கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ. அதன்மீது நடவடிக்கை மேற்கொள்ளவோ அல்லது அதற்கு அனுமதி வழங்கவோ கூடாது என்று மத்திய நீர்வள குழுமத்தையும் இப்பேரவை வலியுறுத்துகிறது. கர்நாடக அரசின் இந்த முயற்சியை முறியடித்து, தமிழக விவசாயிகள் நலனைப் பாதுகாக்க, தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இப்பேரவை தனது ஆதரவை ஒருமனதாக தெரிவித்துக்கொள்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தை முதலமைச்சர் முன்மொழிந்ததும், அதன் மீது கட்சிகள் சார்பில் எம்.எல்.ஏ.க்கள் விவாதிப்பார்கள். பின்னர் அந்த தீர்மானம் எம்.எல்.ஏ.க்களின் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்படும்.