

தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்-யின் 52வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, 2026 ஜூன் 21 மற்றும் ஜூன் 22 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் உள்ள மூன்று உயிரியல் பூங்காக்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வனத்துறை அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, “தமிழ்நாடு அரசின் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வண்டலூர், மேலூர் அமிர்தி மற்றும் சேலம் குரும்பப்பட்டி ஆகிய மூன்று உயிரியல் பூங்காக்கள் உள்ளது.
முதல்வர் ஜோசப் விஜய்-யின் 52-வது பிறந்தநாளையொட்டி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் நுழைவு கட்டணம் இல்லாமல், வழக்கமான முறையில் இணைய வழியாக நுழைவுச் சீட்டை பெற்றுக்கொண்டு, ஜூன் 21, 22 ஆகிய இரு தேதிகளில் உயிரியல் பூங்காக்களில் அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த இரண்டு நாட்களுக்கான நுழைவுக் கட்டணத்தை தவெக சார்பாக வனத்துறை அமைச்சரான நானும் எனது சகோதரர்களும் மற்றும் குடும்ப அறக்கட்டளையும் அரசுக்கு முழுமையாக செலுத்தி விடுவோம்.
இந்த இரண்டு நாட்களுக்கான நுழைவு கட்டணச் செலவு கிட்டத்தட்ட ரூ.70 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கலாம்.
குழந்தைகள் எங்களுக்குத் தெய்வங்களைப் போன்றவர்கள். அவர்களின் மகிழ்ச்சிக்காகவே இதை ஏற்பாடு செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.