தமிழக செய்திகள்

சமூக ஊடகங்கள் என்னை ‘மீம்’ பொருளாக மாற்றியது வேதனை அளிக்கிறது - மேயர் பிரியா பேட்டி!

புதுமுக ஆட்சியாளர்கள் நிர்வாகம் கற்க காலம் தேவை ஆறு மாதம் கற்றதை அவர்கள் ஓராண்டில் கற்பர் - மேயர் பிரியா

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தான் பதவி யேற்ற நாள் முதலே ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி வருகிறார். சமீபத்தில் சாதாரணமாக சிகை அலங்காரம் செய்து கொண்டதற்கு கூட சமூக வலைதளங்களில் கடுமையான கேலி, கிண்டல்களுக்கு ஆளானார்.

தனிப்பட்ட வலிகள்

இணையவழி துன்புறுத்தலுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் அளவிற்கு இந்த விவகாரம் சென்றது. பொதுவாழ்வில் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு சந்திக்கும் தனிப்பட்ட வலிகள், தற்போதைய சமூக ஊடக போக்கு மற்றும் தமிழக அரசியல் சூழல் குறித்து மேயர் பிரியா பேட்டி சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார்.

அப்போது சமூக ஊடகங்களில் டிரெண்டிங் செய்யப்பட்டு வரும் உங்களின் சிகை அலங்காரம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், எனது சிகை அலங்காரம் செய்தியாகி விமர்சனங்களை சந்திப்பது வேதனை அளிக்கிறது. சமூக வலைதள கேலிகளால் நான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன். சமூக ஊடகங்கள் என்னை ஒரு ‘மீம்' பொருளாக மாற்றி விட்டது என்று கூறினார்.

மக்கள் பணி

தான் மேயரான பிறகு மாநகராட்சியில் உள்ள காலி நிலங்களை கண்டறிந்து ஸ்பாஞ்ச் பூங்காக்கள், நூலகங்கள், பெண்களுக்கான உடற்பயிற்சி கூடங்கள் அமைத்ததுடன், மாநகராட்சி பள்ளிகளிலும் பல்வேறு முன்னெடுப்புகளை செய்துள்ளேன்.

தற்போது கள ஆய்வுக்கு செல்லும்போது தனது திட்டங்கள் செயல்வடிவம் பெற்றிருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். நான் செய்த இந்த மக்கள் பணிகளை பற்றி யாரும் பேசுவதில்லை.

ஆட்சி விமர்சனம்

உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் நடித்திருந்தாலும் அவர் தொடர்பான தகவல்கள் வெளியிடும்போது சினிமா வீடியோக்கள் வெளியிடப்படுவதில்லை. ஆனால் முதலமைச்சர் விஜய்யை பொறுத்தவரை, பார்வையாளர்களை கவர வேண்டும் என்பதற்காகவே சினிமா தொடர்பான வீடியோக்கள் வெளியிடப்படுகிறது என்றார்.

மேலும், த.வெ.க. அரசின் முதல் 6 மாத கால செயல்பாடு குறித்த கேள்விக்கு, ஆட்சியாளர்கள் அனைவரும் புதுமுகங்கள் என்பதால் நிர்வாகத்தை கற்றுக்கொள்ள அவர்களுக்கு கால அவகாசம் தேவைப்படும். அவர்களை பார்க்கும்போது தனது ஆரம்பகால அரசியல் பயணம் நினைவுக்கு வருகிறது.

தான் 6 மாதங்களில் கற்றுக்கொண்ட நிர்வாக நுணுக்கங்களை அவர்கள் கற்றுக்கொள்ள ஓராண்டு ஆகும். தற்போதைய ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு மற்றும் பிற துறைகள் முற்றிலும் சீர்குலைந்து விட்டது. போக்குவரத்து சிக்னல்களில் கூட பலர் தலைக்கவசம் அணியாமல் செல்வதை பார்க்க முடிகிறது. சிறை உடைப்பு சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் டாஸ்மாக் பிரச்சினைகளே தினசரி செய்திகளாக வருகின்றன என கூறியுள்ளார்.

மேயர் பிரியா அனுபவம்

மேயராக தனது ஆரம்ப கால அனுபவங்களை பகிர்ந்து கொண்ட பிரியா, முதல் 6 மாதங்கள் தனக்கு மிகவும் கடினமாக இருந்த தாகவும், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு போன்ற மூத்த தலைவர்க ளின் வழிகாட்டுதலால் நிர்வாகத்தின் அரசியல் நுணுக்கங்களை புரிந்து கொள்ள முடிந்ததாகவும் நினைவு கூர்ந்தார்.

புதிய திட்டங்களை செயல்படுத்த முயலும்போது நிதி இல்லை என கூறி அதிகாரிகள் முட்டுக்கட்டை போட முயற்சிப்பார்கள். அந்த நேரத்தில் நாம் உறுதியாக நின்று காரியங்களை சாதிக்க வேண்டும். தனது அரசியல் பயணத்திற்கு குடும்பத்தினர் பக்கபலமாக இருப்பதாகவும், சமூக வலைதள விமர்சனங்களை புறக்கணிக்குமாறு அவர்கள் அறிவுறுத்துவதாகவும் கூறினார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி ஆகியோரின் ஆதரவு இல்லையென்றால் தன்னால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மேயர் பிரியா மோதல் மறுப்பு

சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திரு.வி.க. நகர் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.பல்லவியுடன் மோதல் ஏற்பட்டதாக வெளியான தகவலை மறுத்த பிரியா, இருவரும் வெவ்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் என்றாலும் மோதல் ஏற்பட எந்த காரணமும் இல்லை.

‘திஷா' ஆலோசனை கூட்டத்திற்கு தனது குழந்தையுடன் வந்திருந்த பல்லவி, கைப்பேசியில் குழந்தைக்கு வீடியோ காட்டிக்கொண்டிருந்தார். அந்த கூட்டத்தில் வேறு எந்த த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்காத நிலையில் பல்லவி மட்டுமே வந்திருந்ததாக விளக்கமளித்தார்.

தற்போதைய மாநகராட்சி மன்றத்தில் மேயராக பணியாற்றுவதில் உள்ள சவால்கள் குறித்து பேசிய அவர், ஒரு பெண்ணாக இருந்து கொண்டு மாநில அரசுக்கு எதிராக குரல் கொடுப்பது கடினமான காரியம். கடந்த காலத்தில் தான் அயராது உழைத்ததாகவும், ஆனால் தற்போதைய மன்றத்திடம் எந்த புதிய திட்டங்களும் இல்லாமல் வழக்கமான பணிகள் மட்டுமே நடந்து வருகிறது.

அதிகாரிகள் நிதிபற்றாக்குறையை காரணம் காட்டுவதால், நாம் கவனமாக செயல்படாவிட்டால் சென்னை மாநகரம் முன்னேறுவதற்கு பதிலாக பின்னோக்கி செல்லும் அபாயம் உள்ளதாக கூறினார்.

SCROLL FOR NEXT