தமிழக செய்திகள்

ஸ்மார்ட் வகுப்பறை முதல் ஹைடெக் ஆய்வகம் வரை.. புதுப்பொலிவு பெறும் சென்னை மாநகராட்சி பள்ளிகள்

மாணவ மாணவிகளுக்கு எளிமையான முறையில் கற்பித்தல் பணி நடைபெறுகிறது.

சென்னை மாநகராட்சி சார்பில் 417 பள்ளிக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. தொடக்கப்பள்ளிகள் 206, நடுநிலைப்பள்ளிகள் 130, உயர்நிலைப் பள்ளிகள் 46 மேல்நிலைப் பள்ளிகள் 35 ஆகியவற்றில் சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்துவதற்காக பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது.

மாணவ- மாணவிகளின் சீருடைகள் முதல் வகுப்பறை வரை தனியார் பள்ளிகளுக்கு நிகராக சென்னை மாநகராட்சி பள்ளிகள் விளங்குகின்றன. வசதி வாய்ப்பு இல்லாத ஏழை குழந்தைகள் மட்டுமே மாநகராட்சி பள்ளிகளில் படிக்கின்ற நிலையில் அவர்களுக்கு எந்த ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்படக்கூடாது என்பதற்காக வகுப்பறைகள், விளையாட்டு உபகரணங்கள், கழிவறைகள், நூலகங்கள் பரிசோதனை கூடங்கள் மேம்படுத்தப்பட்டு உள்ளன.

மாநகராட்சி பள்ளிகள் அனைத்திலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பள்ளிக்கு ஒன்று, 2 வகுப்பறைகள் காலத்திற்கு ஏற்ப குழந்தைகளுக்கு கற்றலில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு பள்ளிகள் படிப்படியாக புதுப்பொலிவு பெற்று வருகின்றன. தரமான காலை உணவு, மதிய உணவு வழங்கப்படுவதோடு அவர்களுக்கு சிறந்த கல்வியையும் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிறப்பு வகுப்புகள், வெளிநாட்டு பயணங்கள், கல்வி சுற்றுலா போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டு மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது.

ஸ்மார்ட் வகுப்பறைகள் ஒவ்வொரு பள்ளியிலும் இடம் பெற்றாலும் இன்னும் முழுமையாக அனைத்து வகுப்புகளுக்கும் கொண்டு வரப்படவில்ல.

இண்டர்நெட், வை பை வசதியுடன் வகுப்பறைகள் மாற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் மாணவ மாணவிகளுக்கு எளிமையான முறையில் கற்பித்தல் பணி நடைபெறுகிறது.

மேலும், ஹை டெக் ஆய்வகங்கள் ஒவ்வொரு பள்ளியிலும் படிப்படியாக அமைக்கப்படுகிறது. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு-மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைக்க கூடிய வகையில் ஆசிரியர்கள் சிறப்பு வகுப்புகள் நடத்து கிறார்கள்.

ஒவ்வொரு பள்ளியிலும் விளையாட்டு மைதானங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்கள் விளையாடுவதற்கு உபகரணங்கள் புதிதாக வாங்கி கொடுக்கப்பட்டு உள்ளது. சிறு குழந்தைகள் விளையாடுவதற்கு விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பள்ளி வளாகங்களில் மாணவர்களை கவரக்கூடிய வகையில் அழகு ஓவியங்கள் கருத்து படங்கள் வரையப்பட்டுள்ள.

ஒவ்வொரு வகுப்பறைகளும் வண்ண மேஜைகள் மற்றும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. வகுப்பறையில் குழந்தைகளுக்கு தனித் தனி இருக்கைகள் அமைக்கப்பட்ட வகுப்பறை என்ற சூழலையே மாற்றப்பட்டு உள்ளது.

மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கல்வி கற்கும் வகையில் மாநகராட்சி பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. இதுவரையில் 26 ஆயிரம் மாணவர்கள் இந்த ஆண்டு சேர்க்கப்பட்டுள்ளனர். மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

தொடர்ந்து மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.