தமிழக செய்திகள்

தனியார் பால் விலை உயர்வால் ஆவினில் தட்டுப்பாடு - அமைச்சர் விஜயலட்சுமி!

கொள்முதல் விலையை உயர்த்தினாலும் விற்பனை விலையை ஆவின் உயர்த்தவில்லை. இதனால் ஆவின் நஷ்டத்தை சந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கொள்முதல் விலை உயர்வு

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்தபிறகு ஆவினுக்கான பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதனால் விவசாயிகள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் மறுபுறம் தமிழ்நாடு அரசின் இந்த உத்தரவால் தமிழ்நாட்டில் உள்ள தனியார் பால் நிறுவனங்கள் மட்டுமின்றி, அண்டை மாநில தனியார் பால் நிறுவனங்களும் தங்களுக்கான பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டன.

பால் விலை உயர்வு

அதன் விளைவாக தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தியுள்ளன. அதேவேளை கொள்முதல் விலையை உயர்த்தினாலும் விற்பனை விலையை ஆவின் உயர்த்தவில்லை. இதனால் ஆவின் நஷ்டத்தை சந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதனிடையே கொள்முதல் குறைந்து ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு அதிகரித்து வருவதாகவும் அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் ஆவின் பால் தட்டுப்பாடுக்கான காரணம் குறித்து பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி விளக்கம் அளித்துள்ளார். தனியார் பால் விலை உயர்வால் மக்கள் ஆவினை அதிகம் நாடுவதால் இந்த தட்டுப்பாடு நிலவியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்.,

“ஆவினில் பால் கொள்முதல் அதிகரித்துள்ளது. மதிப்புக்கூட்டு பொருட்களின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தியுள்ளன. ஒரு லிட்டர் ரூ.80 என தனியார் நிறுவனங்கள் விற்கும் நிலையில், ஆவின் ரூ.44க்கு கொடுக்கிறது. இதனால் மக்கள் ஆவினை தேடி வர ஆரம்பித்துள்ளனர்.

இதனால் பால் பற்றாக்குறை ஏற்படுகிறது. தற்போது சென்னைக்கு 15 லட்சம் லிட்டர் பால் வழங்கப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் இந்த பிரச்னையும் சரிசெய்யப்படும்.” என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT