

ஆவின் பால் விற்பனை விலையில் மாற்றத்தை கொண்டு வர தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;
ஆவினுக்கான பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்ட பிறகு, தமிழ்நாட்டில் உள்ள தனியார் பால் நிறுவனங்கள் மட்டுமின்றி, அண்டை மாநில தனியார் பால் நிறுவனங்களும் தங்களுக்கான பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.
காரணம் கடந்த சில ஆண்டுகளாக இந்தியா முழுவதும் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் தனியார் பால் நிறுவனங்கள் தங்களுக்கான பால் கொள்முதலை தக்க வைத்துக் கொள்ள கடுமையாக போராடி வருகின்ற சூழலில் ஆவினுக்கான பால் கொள்முதல் விலை உயர்வு அந்நிறுவனங்களுக்கு மேலும் சிக்கலை உருவாக்கியதால் வேறு வழியின்றி விவசாய பெருமக்களுக்கான பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க தொடங்கின.
அவ்வாறு பாலுற்பத்தியாளர்களுக்கு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிய காரணத்தால் அந்த நிதியிழப்பை ஈடுசெய்ய தனியார் பால் நிறுவனங்கள் பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனை விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் (செப்டம்பர்-21) தென்னிந்தியாவின் முன்னணி தனியார் பால் நிறுவனங்களுள் ஒன்றான ஆரோக்யா நிறுவனம் தங்களின் பால் விற்பனை விலையை லிட்டருக்கு 4.00ரூபாய் வரையிலும், தயிர் விற்பனை விலையை கிலோவிற்கு 2.00ரூபாயும் உயர்த்தியது.
இந்த சூழலில் தென்னிந்தியாவின் முன்னணி தனியார் பால் நிறுவனங்களுள் ஆரோக்யாவை தொடர்ந்து அண்டை மாநில தனியார் பால் நிறுவனங்களான டோட்லா, ஹெரிடேஜ், திருமலா, சீனாவாசா, வல்லபா, ஜெர்சி உள்ளிட்ட முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் நாளை சனிக்கிழமை முதல் (செப்டம்பர்-26) பால் விற்பனை விலையை லிட்டருக்கு 4.00ரூபாய் வரையிலும், தயிர் விற்பனை விலையை கிலோவிற்கு 2.00ரூபாயும் உயர்த்த இருக்கின்றன.
அதன்படி 500மிலி சமன்படுத்தப்பட்ட பால் (Toned Milk) 31.00ரூபாயில் இருந்து 32.00ரூபாயாகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் (Standardized Milk) 35.00ரூபாயில் இருந்து 37.00ரூபாயாகவும், கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பால் (Full Gream Milk) 40.00ரூபாயில் இருந்து 42.00ரூபாயாகவும், 1000மிலி சமன்படுத்தப்பட்ட பால் (Toned Milk) 59.00ரூபாயில் இருந்து 61.00ரூபாயாகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் (Standardized Milk) 68.00ரூபாயில் இருந்து 70.00ரூபாயாகவும், கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பால் (Full Gream Milk) 78.00ரூபாயில் இருந்து 81.00ரூபாயாகவும், 500கிராம் (Toned Milk Curd) தயிர் 41.00ரூபாயில் இருந்து 42.00ரூபாயாகவும், Double Toned Milk Curd தயிர் 36.00ரூபாயில் இருந்து 37.00ரூபாயாகவும் விற்பனை விலை உயர்வு செப்டம்பர் 26ம் தேதி முதல் அமுலுக்கு வருகிறது.
தனியார் பால் நிறுவனங்களின் இந்த விற்பனை விலை உயர்வு காரணமாக ஆவினுக்கும், தனியார் பாலுக்குமான விற்பனை விலை வித்தியாசம் 500மிலி சமன்படுத்தப்பட்ட பாலுக்கு (நீலக்கலர் பாக்கெட் - Toned Milk) 7.00ரூபாயும், நிலைப்படுத்தப்பட்ட பாலுக்கு (பச்சை நிற பாக்கெட் - Standardized Milk) 15.00ரூபாயும், கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பாலுக்கு (ஆரஞ்சு நிற பாக்கெட் - Full Gream Milk) 12.00ரூபாயும் என சராசரியாக குறைந்தபட்சம் 14.00ரூபாய் முதல் அதிகபட்சமாக 30.00ரூபாய் வரை ஒரு லிட்டருக்கு விற்பனை விலை வித்தியாசம் இருப்பதால் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் கவனம் ஆவின் மீது திரும்பக் கூடும் என்பதால் தற்போதைய சூழலில் தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் தட்டுப்பாடு மேலும் கூடுதலாகும் சூழல் உருவாகியுள்ளது.
மேலும் பால் கொள்முதல் விலைக்கேற்ப விற்பனை விலையை மாற்றி அமைக்காத காரணத்தால் தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் தற்போது லிட்டருக்கு 15 ரூபாய்க்கு மேல் சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் 4.70 கோடி ரூபாய் இழப்பை சந்தித்து கொண்டிருப்பது; ஒரு கட்டத்தில் ஆவின் நிறுவனம் முடங்கிப் போகும் பேராபத்தில் இருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு ஆவின் பால் விற்பனை விலையில் மாற்றத்தை கொண்டு வர தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது.
மேலும் பால்வளத்துறை என்பது வெறும் ஆவினுக்கான துறையாக மட்டும் இல்லாமல், போக்குவரத்து, மருத்துவம், கல்வி, மின்சாரம் போன்ற துறைகளைப் போன்று ஒட்டுமொத்த பாலுற்பத்தி, விநியோகம், விற்பனையை கண்காணிக்க, தனியார் பால் நிறுவனங்கள், அவற்றின் பால் முகவர்கள், பாலுற்பத்தியாளர்களுக்குரிய பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றை சரி செய்து, பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையில் ஒரு சீரான அணுகுமுறையை கடைபிடிக்க பாலமான துறையாக பால்வளத்துறை செயல்படுவதற்கான உத்தரவை தமிழ்நாடு முதலமைச்சர் பிறப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதோடு,
ஏழை, எளிய, நடுத்தர மக்கள் நலன் சார்ந்து அடிக்கடி விற்பனை விலையை உயர்த்துவதை தனியார் பால் நிறுவனங்கள் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.