தமிழக செய்திகள்

பாலியல் வன்கொடுமை வழக்கு - ஜெம் வீரமணி மீது பாய்ந்தது குண்டாஸ்!

ஜெம் வீரமணி மற்றும் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகிய மூவரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக, போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆர். வீரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வழக்கின் பின்னணி

ஏழைச் சிறுமிகளின் படிப்புக்கு நிதியுதவி அளிப்பதாகக் கூறி, அவர்களைத் தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக வீரமணி மீது அடுத்தடுத்து புகார்கள் பதிவாகின. இதனையடுத்து கடந்த 2025 அக்டோபரில் பெறப்பட்ட ஒரு பென்டிரைவ் ஆதாரத்தின் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை தீவிரமடைந்தது.

கைது

இந்த வழக்கில் ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி (84), அவருக்கு உடந்தையாக இருந்த பெண் உதவியாளர் சாந்தி (60) மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் (63) ஆகிய மூன்று பேரும் கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

கூடுதல் வழக்குகள்

இந்த விவகாரத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு, வீரமணி மீது இதுவரை 3 போக்சோ வழக்குகளை பதிவு செய்துள்ளது. மேலும் வீரமணி மீது புகார் தெரிவிப்போர் தெரிவிக்கலாம் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குண்டாஸ் நடவடிக்கை

அண்மையில் மூவரின் நீதிமன்ற மற்றும் போலீஸ் காவல் நீட்டிக்கப்பட்ட நிலையில், மூவரும் ஜாமினில் வெளிவருவதைத் தடுக்கும் பொருட்டு குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. மூவரும் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT