

ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி மீதான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் ஜாமின் கோரி சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அவர்கள் தாக்கல் செய்த மனுக்களில், எங்களை போலீசார் ஆகஸ்ட் 28-ந்தேதி கைது செய்து, 29-ந்தேதி புழல் சிறையில் அடைத்தனர்.
கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபர் 6-ந்தேதி இந்திய குழந்தைகள் நல அமைப்பு அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, ஆறு ஆண்டுகள் தாமதமாக 2025-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த தாமதத்துக்கு எந்த விளக்கமும் இல்லாததால், வழக்கில் சந்தேகம் எழுந்துள்ளது. நாங்கள் எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை. புகார்தாரர், பாதிக்கப்பட்டவரல்ல. புகார்தார்ர் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோரோ, பாதுகாவலர்களோ அல்ல.
பாதிக்கப்பட்ட எந்த சிறுமிக்ளும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. வழக்கில் காவல் துறையினர், நிபுணர்கள் தான் சாட்சிகளாக உள்ளனர். அவர்களின் வாக்குமூலங்கள் காவல் துறை வசம்தான் உள்ளன.
அதனால் சாட்சியங்களை கலைக்க வாய்ப்பில்லை. கைது செய்து 24 மணி நேரத்துக்கு பிறகே எங்களை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜரபடுத்தி சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்டு மூன்று வாரங்கள் நெருங்கும் நிலையில் இதுவரை எங்களை காவலில் வைத்து விசாரிக்க கோரி காவல் துறை மனுத்தாக்கல் செய்யாததாலும், ஆதாரங்கள் ஏற்கனவே சேகரிக்கப்பட்டு விட்டதாலும் தொடர்ந்து தங்களை சிறையில் அடைத்து வைத்திருக்க அவசியமில்லை என்பதாலும் ஜாமின் வழங்க வேண்டும்.
நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக உள்ளோம்” என்று மனுவில் கூறியுள்ளனர்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.