தமிழகத்தில் இடைத்தரகர்கள் நடமாட்டத்தை ஒழிக்கும் வகையிலும், பொதுமக்கள் எளிதாகப் பத்திரப்பதிவு செய்யும் வகையிலும், ‘Anyway Registration’ என்ற புதிய திட்டம் வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் பொதுமக்கள் 24 மணி நேரமும் ஆன்லைன் மூலமாகவே பத்திரப்பதிவு செய்துகொள்ளும் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
பதிவுத்துறையை முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கும் இந்த முயற்சியில், முதன்முறையாக நிலம் வாங்குபவர்களுக்கும் மற்றும் முதன்முறையாக அபார்ட்மெண்ட்டுகளில் வீடு வாங்குபவர்களுக்கும் ஆன்லைன் முறையிலேயே பத்திரப்பதிவு செய்து கொடுக்க சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதற்காக, வீடு மற்றும் அபார்ட்மெண்ட் விற்பனையாளர்களுக்கு எனத் தனி லாகின் ஐடி வழங்கப்படும். இதன் மூலம் அவர்கள் எந்த நேரத்திலும், அதாவது 24 மணி நேரமும் தங்களின் வாடிக்கையாளர்களுக்குப் பத்திரப்பதிவுப் பணிகளைச் செய்து கொடுக்க முடியும்.
பொதுமக்கள் இந்த ஆன்லைன் பத்திரப்பதிவு முறையை எவ்விதத் தடங்கலும் இன்றிப் பயன்படுத்துவதற்கும், சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வதற்கும் ‘Anyway Registration’ திட்டத்திற்கு எனத் தனியாக ஒரு சிறப்பு உதவி எண் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும் இந்த நிதியாண்டில் பத்திரப்பதிவுத்துறை மூலமாக ரூ.31,000 கோடி வருவாயை ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நிலங்களுக்கான வழிகாட்டுதல் மதிப்பை அதிகரிப்பது குறித்து அமைக்கப்பட்ட குழு, தற்போது அரசிடம் அறிக்கை அளித்துள்ளது. இது தொடர்பாக முதலமைச்சருடன் விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இடைத்தரகர்கள் தலையீடு இன்றி பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்படும் என்று அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் கூறியுள்ளார்.