விழுப்புரம்:
விழுப்புரத்தில் இன்று மாலை நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் தீவிர வெடிகுண்டு சோதனை நடந்து வருகிறது.
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்துவதற்கு நிபந்தனைகளுடன் சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியது. இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் முடிவில் தமிழ்நாடுஅரசின் மேல் முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதோடு ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கி சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.
இதை தொடர்ந்து விழுப்புரத்தில் இன்று மாலை ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்துவதற்கு அந்த அமைப்பினர் ஏற்பாடு செய்தனர். அதன்படி விழுப்புரம் நகரில் இன்று மாலை ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடக்கிறது. புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த ஊர்வலம் 4 முனை சந்திப்பு, சென்னை நெடுஞ்சாலை, பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம், காமராஜர் வீதி, திரு.வி.க. வீதி, காந்தி சிலை, நேரு சாலை வழியாக பழைய பஸ் நிலையத்தில் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து அங்கு பொதுக்கூட்டம் நடக்கிறது.
விழுப்புரத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடைபெறுவதையொட்டி இந்த ஊர்வலம் அமைதியான முறையில் நடைபெறவும், அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்கவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இதனிடையே நேற்று மாலை முதல் நகரின் முக்கிய இடங்களான பழைய பஸ்நிலையம், புதிய பஸ் நிலையம், கடை வீதி, பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் மற்றும் ஊர்வலம் செல்லும் சாலைகள், பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்களில் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்பநாய் ராணி மூலம் தீவிர வெடிகுண்டு சோதனை நடத்தி வருகின்றனர்.