முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சியை கவிழ்ப்பதற்காக அந்த கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசப்பட்ட விவகாரம் அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக ஊத்தங்கரை த.வெ.க. எம்.எல். ஏ. இளையராஜாவை தொடர்பு கொண்டு சென்னையை சேர்ந்த யூ டியூபரான திருநாவுக்கரசு உங்களுக்கு ரூ.35 கோடி பணம் தருகிறோம். நீங்கள் அதை வாங்கி கொண்டு, கொறடா உத்தரவை மீறி சபாநாயகரின் தீர்மானத்திற்கு எதிராக ஓட்டு போட வேண்டும் என்று ஆசை காட்டியுள்ளனர்.
அதற்கு உடன்படாத இளையராஜா, அளித்த புகாரின் பேரில் திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் திருநாவுக்கரசு உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் ஆகியோரது தூண்டுதலின் பேரிலேயே பேரம் பேசியதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதைதொடர்ந்து செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் குமார் ஆகியோரிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.
அசோக் குமாரின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. செந்தில் பாலாஜியின் பெயர் இன்னும் வழக்கில் சேர்க்கப்படவில்லை.
இருப்பினும் அவரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டதை தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கும் அவரது தம்பிக்கும் போலீசார் சம்மன் அளித்தனர்.
கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டுக்கு சென்ற திருவல்லிக்கேணி போலீசார் வீட்டில் இருந்த செந்தில் பாலாஜியின் பெற்றோரிடம் சம்மனை வழங்கிவிட்டு திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் நாளை (6-ந்தேதி) இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என தெரிவித்தனர்.
போலீசாரின் சம்மனை ஏற்று செந்தில் பாலாஜி தனது தம்பியுடன் நாளை ஆஜர் ஆவாரா? என்கிற எதிர்பார்பு ஏற்பட்டுள்ளது.
இளையராஜா எம்.எல்.ஏ.-வுக்கு ரூ.35கோடி கொடுப்பதற்கு நடத்தப்பட்ட பேரத்தின் பின்னணியில் செந்தில் பாலாஜி இருப்பதாக சென்னை மாநகர போலீசார் குற்றம்சாட்டி இருக்கும் நிலையில் இந்த வழக்கில் அவரையும், அவரது தம்பியையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்தநிலையிலேயே செந்தில் பாலாஜிக்கும் அவரது தம்பிக்கும் சம்மன் அளிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.35 கோடி பேர வழக்கில் தனக்கு முன்ஜாமீன் அளிக்க வேண்டுமென சென்னை ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் மனு அளித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இந்த மனு மீது நடைபெற்ற விசாரணையின்போது, போலீசார் நாளை (திங்கட் கிழமை) பதில் அளிக்க கோர்ட்டு உத்தரவிடப்பட்டு உள்ளது.
அதே நாளில் தான் போலீசாரும் விசாரணைக்கு ஆஜராக கோரி சம்மன் வழங்கியுள்ளனர். இதை தொடர்ந்து ரூ.35 கோடி பேர வழக்கில் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் அசோக்குமாருக்கு முன் ஜாமீன் அளிக்கக்கூடாது என போலீசார் நாளை கோர்ட்டில் பதில் மனுவும் தாக்கல் செய்கிறார்கள். இதன் மூலம் அவருக்கு முன் ஜாமீன் கிடைக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
செந்தில் பாலாஜியின் கரூர் அலுவலகம் மூடி கிடக்கிறது. அவர் செல்போனை பயன்படுத்தாமல் மறைவிடத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாளை விசாரணைக்கு ஆஜரானால் தன் மீதும் கைது நடவடிக்கை பாயலாம் என்கிற அச்சத்தில் செந்தில் பாலாஜியும் முன்ஜாமீன் கேட்டு கோர்ட்டை அணுக முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் செந்தில் பாலாஜியும், அவரது தம்பியும் வெளிநாட்டிற்கு தப்பி சென்று விடக்கூடாது என்பதற்காக விமான நிலையங்களில் லுக் அவுட் நோட்டீசும் வழங்கப்பட்டு உள்ளது.
கடந்த தி.மு.க. ஆட்சியில் செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது 2023-ம் ஆண்டு அமலாக் கக்கத்துறையினரால் கைது செய்யப் ட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது பணியிடங்களுக்கு லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது. 15 மாத சிறைவாசத்திற்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில் தான் அவர் மீது எம்.எல்.ஏ.க் களை இழுத்து த.வெ.க. ஆட்சியை கவிழ்க்க முயற்சித்ததாக புதிய குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கிலும் சட்ட நடவடிக்கைகளை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருவதால் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி கைது ஆக வாய்ப்பு உள்ளதாக வெளியாகி வரும் தகவல்கள் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.