தமிழக செய்திகள்

அனிதா ராதாகிருஷ்ணன் கைது- ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

தி.மு.க. ஆட்சியில் அவதூறு வழக்கில் யாரும் கைது செய்யப்பட்டது இல்லை. அராஜகத்தை முடிவுக்கு கொண்டு வருவோம்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி கடந்த மாதம் 20-ந்தேதி திருச்செந்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மீது புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து ஆத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, எம்எல்ஏவாக இருக்கும் ஒருவர் இப்படி பேசலாமா? என கேள்வி எழுப்பி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக பதிவான வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்திற்கு தி.மு.க அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அராஜகம்

அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது:-

அவதூறு பேச்சுக்காக முன்னாள் அமைச்சர் ஒருவரை கைது செய்வது காட்டுமிராண்டித்தமானது. இது சர்வாதிகாரத்தின் உச்சம். சட்ட ரீதியாக சந்திப்போம்.

தி.மு.க ஆட்சியில் அவதூறு வழக்கில் யாரும் கைது செய்யப்பட்டது இல்லை. அராஜகத்தை முடிவுக்கு கொண்டு வருவோம்.

த.வெ.க ஆட்சியில் ஆக்கப்பூர்வமான பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்றார்.

பொறுப்பற்ற முறை

கரூர் சம்பவத்துக்கு தி.மு.கவே காரணம் என நேற்று மாற்றுக்கட்சியினர் த.வெ.க.வில் இணையும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியிருந்தார். ஆதவ் அர்ஜூனா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த ஆர்.எஸ்.பாரதி, கரூரில் என்ன நடந்தது என்பது உள்ளூர் மக்களுக்கு தெரியும் என கூறினார். மேலும் அமைச்சராக இருக்கும் ஆதவ் அர்ஜூனாவின் பேச்சு கீழ்த்தரமாக, பொறுப்பற்ற முறையில் உள்ளது என்றார்.

முன்னதாக, கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்துள்ளார்.