108 தொகுதிகளில் வென்ற விஜய் தலைமையிலான த.வெ.க., தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று இருந்த காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.
அதே நேரம் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து தங்களது எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜா சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.35 கோடி வரை தன்னிடம் சிலர் பேரம் பேசியதாக தெரிவித்தார்.
இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர்.
தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.35 கோடி பேரம் பேசிய விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை விவரம் வெளியாகி உள்ளது. ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளைராஜா அளித்த புகாரை வைத்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருநாவுக்கரசு, நரேஷ், கிருஷ்ணன், அசோக்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலை மிரட்டல், குற்றச்சதிக்கு உடந்தையாக இருத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் அசோக் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த 3 பேரும், கரூரை சேர்ந்த 2 பேரும், நாமக்கல்லை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது வரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.