தமிழக செய்திகள்

தமிழக அரசு வங்கி கணக்கில் இருந்து ரூ.22 கோடி மோசடி - 7 பேர் கைது

ஊரக வளர்ச்சி துறையின் நிதி பரிவர்த்தனை தொடர்பான இணைய தளத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் இவர்கள் கொண்டு வந்து 10 நாட்களுக்கு மேலாக முழுமையாக ஆய்வு செய்தனர்.

தமிழக அரசு வங்கி கணக்கில் இருந்து ரூ.22 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தமிழக அரசின் வங்கி கணக்கு

தமிழக அரசின் வங்கி கணக்கில் இருந்து ரூ.22 கோடி பணம் சுருட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனி நபர்களின் வங்கி கணக்கில் இருந்து மட்டுமே அதிக அளவில் அவர்களை ஏமாற்றியும் மோசடியான வகையில் அவர்களின் வங்கி கணக்கில் புகுந்தும் பணத்தை சுருட்டிய கும்பல் தற்போது அரசு துறைகளின் பணத்தையும் வாரி சுருட்ட தொடங்கி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி அரசின் வங்கி கணக்கில் இருந்து பணம் மோசடி செய்யப்பட்ட நிலையில் தற்போது தமிழக அரசின் வங்கி கணக்கில் மர்ம நபர்கள் பணத்தை எடுத்தது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

7 பேர் கைது

இந்த நிலையில் ரூ.22 கோடி மோசடி வழக்கில் 7 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளனர். சென்னையில் வைத்து லோகநாதன், அண்ணாதுரை, செல்லபாண்டியன் ஆகியோரும், மதுரையில் 4 பேரும் பிடிபட்டு உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஊரக வளர்ச்சித் துறை வங்கி கணக்கில் இருந்துதான் ரூ.22 கோடி பணத்தை இவர்கள் சுருட்டி இருந்தனர். கடந்த செப்டம்பர் மாதமே இதற்கான திட்டத்தை சைபர் கிரைம் மோசடி கும்பல் தீட்ட தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. ஊரக வளர்ச்சி துறையின் நிதி பரிவர்த்தனை தொடர்பான இணைய தளத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் இவர்கள் கொண்டு வந்து 10 நாட்களுக்கு மேலாக முழுமையாக ஆய்வு செய்தனர்.

பாதுகாப்பு குறைபாடுகள்

அப்போது நிதி பரிவர்த்தனை இணைய தளத்தில் உள்ள குறைபாடுகளை கண்டுபிடித்து அதனை தங்களது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துள்ளனர். இதன் பிறகு போலியான ஒப்புதல் கடிதங்களை உருவாக்கி அதன் மூலமாக பணத்தை அரசு வங்கி கணக்கில் இருந்து தங்களது வங்கி கணக்கிற்கு மாற்றி இருக்கிறார்கள்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றி யத்தில் ரூ.14 கோடியையும், நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3 கோடி, தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.5 கோடி என இவர்கள் போலியான ஆவணங்களை தயாரித்து பணத்தை கைமாற்றி இருக்கிறார்கள்.

24 வங்கி கணக்கில்

பின்னர் இந்த பணத்தை உடனடியாக 24 வங்கி கணக்கிற்கு அதிரடியாக பரிமாற்றம் செய்து உள்ளனர். பொதுவாக இது போன்ற மோசடி செயல்களில் வெளிமாநிலங்களை சேர்ந்த நபர்கள்தான் அதிகமாக ஈடுபட்டு வந்தனர். தற்போது தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள் பலரும் இந்த சைபர் கிரைம் மோசடியில் ஈடுபட தொடங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த மோசடி பற்றி இந்த மாதம் தொடக்கத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி இருந்தனர். இந்த நிலையில்தான் 7 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

அறிவுறுத்தல்

இது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகள் கூறும் போது, ‘அரசு வங்கி கணக்குகளில் இருந்து மோசடியாக இது போன்று பணத்தை எடுக்க முடியாத அளவுக்கு பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்த வேண்டும் என அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தலை வழங்குமாறு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்ப இருப்பதாக தெரிவித்தனர்.

இது தொடர்பாக உயர் அதிகாரிகளோடு கலந்து ஆலோசித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாகவும் கூறி உள்ளனர்.

SCROLL FOR NEXT