

இடைத்தரகர்கள், எழுத்தர்கள் இல்லாமல் பொதுமக்களே நேரடியாக பத்திரப்பதிவு செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக பத்திரப்பதிவுத்துறையில் 'ஸ்டார் 3.0' திட்டத்தின் கீழ் பத்திரம் தயாரிக்கும் பணிகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து பத்திர எழுத்தர்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதாவது ஸ்டார் 3.0 திட்டத்தின் மூலம் பத்திரப்பதிவு சேவைகள் தனியார் நிறுவனங்களிடம் சென்றால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், பத்திரம் தயாரிப்பதற்கான செலவு அதிகரித்து பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள் என்றும் பத்திர எழுத்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பொதுமக்களே தங்களது ஆவணங்களை இணையவழியில் தயாரித்து பதிவு செய்யும் வகையில் பதிவுத்துறை புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதாவது பத்திரம் எழுதுவதற்காக பத்திர எழுத்தர்கள், இடைத்தரகர்களை நாட வேண்டிய நிலையை மாற்றும் வகையில், பொதுமக்களே தங்களது ஆவணங்களை இணையதளம் மூலம் தயாரித்து, பதிவுக்கு சமர்ப்பிக்கும் புதிய வசதியை பதிவுத்துறை அறிமுகப்படுத்தி உள்ளது.
இதற்காக பதிவுத்துறையின் https://tnreginet.gov.in இணையதளத்தில், ஆவணங்களை எளிய முறையில் உருவாக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் 'லாகின்' உருவாக்கி, ஆவணங்களை இணையவழியில் தயாரித்து பதிவுக்கு சமர்ப்பிக்கலாம்.
அதற்காக முதலில் இணையதளத்தில் உள்நுழைந்து, 'ஆவணப்பதிவு' என்பதை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் ஆவணத்தை உருவாக்கும் பகுதிக்கு செல்ல வேண்டும். தொடர்ந்து விற்பனை, செட்டில்மெண்ட், பாகப்பிரிவினை உள்ளிட்ட எந்த வகையான ஆவணத்தை உருவாக்க வேண்டும் என்பதை தேர்வு செய்து, 'தொடரவும்' என்பதை கிளிக் வேண்டும். பின்னர் விற்பவர், வாங்குபவர், சாட்சிகள், சொத்து மற்றும் பிற தேவையான விவரங்களை பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும். இதையடுத்து ஒரு 'டி.பி. எண்' வழங்கப்படும்.
அதன்பின்னர் உள்ளீடு செய்த விவரங்களை சரிபார்த்து, உருவாக்கப்பட்ட ஆவணத்தை 'எனது ஆவணங்கள்' பகுதியில் பார்க்கலாம். பின்னர் அதை 'பி.டி.எப்' வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் ஆவணத்துக்கான கட்டணத்தை இணையவழியில் செலுத்தலாம். இதன்பின்னர் காகிதமில்லா ஆவணப்பதிவு' முறையைத் தேர்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மூன்றாவது நிலையில் வழங்கப்பட்ட டி.பி. எண்ணை உள்ளீடு செய்து, தேவையான தகவல்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதன்பிறகு ஆன்லைனில் 'ஓ.டி.பி.' மூலம் 'இ-கையெழுத்து' இட வேண்டும். தொடர்ந்து தங்களுக்கு வசதியான நாள் மற்றும் நேரத்தைத் தேர்வு செய்து, பதிவு செய்வதற்கான முன்பதிவு டோக்கனை பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஆவணத்தை பதிவு செய்யும் நபர்கள் மற்றும் சாட்சிகள், முன்பதிவு செய்த நாள் மற்றும் நேரத்தில் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் செல்ல வேண்டும். அங்கு சார்பதிவாளர் அடையாளம் மற்றும் ஆதார் அங்கீகாரத்தை சரிபார்ப்பார். கைரேகை அல்லது விழித்திரை மூலம் இறுதி ஆதார் சரிபார்ப்பும் மேற்கொள்ளப்படும். அதன்பிறகு சார்பதிவாளர் ஆவணத்தில் இ-கையெழுத்து இட்டு, பதிவு செய்யப்பட்ட ஆவணம் சம்பந்தப்பட்ட நபரின் இணையதள உள்நுழைவுக்கு அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் பொதுமக்கள் இடைத்தரகர்களின் உதவியின்றி, தங்களது ஆவணங்களை தாங்களே உருவாக்கி பதிவு செய்து கொள்ளலாம் என்று பதிவுத்துறை தெரிவித்துள்ளது.