தமிழக செய்திகள்

ரூ.20 கோடி தங்க காசு மோசடி - பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

போலீஸ் துணை கமிஷனர் ஒருவரும் தங்க காசுகளுக்கு ஆசைப்பட்டு பெரும் தொகையை செலுத்தி உள்ளார்.

தங்க காசு மோசடி வழக்கில் சென்னை பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ராயபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் ஷீலாமேரி. இவர் திருவொற்றியூர் உள்ளிட்ட வடசென்னை பகுதிகளில் நீண்ட காலம் பணிபுரிந்துள்ளார்.

தங்க காசு மோசடி

இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி குறைந்த விலையில் தங்க காசுகளை வாங்கித் தருவதாக கூறி பொதுமக்களிடமும், காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடமும் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இன்ஸ்பெக்டர் ஷீலா மேரியின் கார் டிரைவரும், உறவினருமான பிரபுமணி என்பவர் இந்த வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைதானார்.

இன்ஸ்பெக்டர் கைது

இந்த நிலையில் இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் ஷீலாமேரியும் கைது செய்யப்பட்டு உள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளனர். இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தங்க காசு மோசடி நடைபெற்றது எப்படி என்பது பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:-

கொடுங்கையூர்

சென்னை கொடுங்கையூரில் தனியார் நிறுவனத்தை நடத்தி வந்த பிரபுமணி வேறொரு தங்க நகை வியாபாரியிடம் தங்க காசுகளை வாங்கி இன்ஸ்பெக்டர் மூலமாக அதனை பலரிடம் விற்பனை செய்து பணம் சம்பாதித்து வந்துள்ளார்.

இதில் இன்ஸ்பெக்டர் ஷீலாமேரிக்கும், பிரபு மணிக்கும் நல்ல வருவாய் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து 100-க்கணக்கானவர்களிடம் அவர்கள் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் வரை ஒவ்வொரு மாதமும் வசூலித்து உள்ளனர்.

ரூ.20 கோடி

200-க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.20 கோடி வரையில் இன்ஸ்பெக்டர் ஷீலாமேரி பணம் வசூலித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இப்படி பொதுமக்கள் மற்றும் காவலர் குடும்பத்தினரிடம் பணம் வசூலித்த நிலையில் அவர்களுக்கு முறையாக தங்க காசுகளை வாங்கி கொடுக்காமல் மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரிலேயே கைது நடவடிக்கை பாய்ந்து உள்ளது. பிரபுமணி போலீஸ் இன்ஸ்பெக்டரின் காரிலேயே சென்று காவலர் குடியிருப்புகளில் தங்க காசு திட்டத்தை பற்றி எடுத்துக் கூறி பணம் வசூலில் ஈடுபட்டு உள்ளனர்.

3 விதமான தங்க திட்டங்கள் இருப்பதாக கூறி செயலி வாயிலாகவும் பலரை பணம் கட்ட வைத்து இருக்கிறார்கள்.

கமிஷன்

கடந்த 2023 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி தங்க காசுகளை வாங்கி கொடுப்பதை சைடு பிசினஸ் போல தொழிலாகவே மேற்கொண்டு வந்துள்ளார். அப்போதுதான் பலரும் பணம் கட்டி உள்ளனர். போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பலரும் இதில் சேர்ந்து ஆட்களையும் பிடித்து கொடுத்து உள்ளனர். அதற்காக அவர்களுக்கு கமிஷனும் வழங்கப்பட்டு உள்ளது.

போலீஸ் துணை கமிஷனர் ஒருவரும் தங்க காசுகளுக்கு ஆசைப்பட்டு பெரும் தொகையை செலுத்தி உள்ளார்.

துணை கமிஷனர்

பிரபுமணியும், இன்ஸ்பெக்டர் ஷீலா ராணியும் காவலர் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை வசூலித்து சென்னையை சேர்ந்த நகை வியாபாரி மூலமாக தங்க காசுகளை பெற்று விநியோகித்து வந்து உள்ளனர். இவர்களிடம் பணத்தை வாங்கிய மொத்த நகை வியாபாரி தங்க காசுகளை கொடுக்காமல் ஏமாற்றி உள்ளார். இதனாலேயே இவர்களால் தாங்கள் வாங்கிய பணத்திற்காக தங்க காசுகளை கொடுக்க முடியாமல் போனதும் தெரிய வந்துள்ளது.

அப்போது துணை கமிஷனருக்கு பணத்தை திருப்பி கொடுத்ததும் தெரிய வந்துள்ளது. மோசடி வழக்கில் சென்னை மாநகர காவல் துறையில் பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

முன்ஜாமின்

இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி மீது கடந்த சில நாட்களுக்கு முன்பே குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து காவல்துறை சார்பில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் சஸ்பெண்டு ஆனார். இதற்கிடையே பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தங்க காசு மோசடி பற்றி தீவிரமாக விசாரணை நடத்திய நிலையில் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமின் கேட்டு இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி மனுத்தாக்கல் செய்து இருந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தான் போலீசார் அவரை கைது செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.