பழனி கோவிலில் ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடியில் நிலம் வாங்கியவர், விற்றவர் தலைமறைவாகி உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பூங்கா ரோட்டில் தண்டபாணி சுவாமி மடத்தில் அறக்கட்டளைக்கு சொந்தமான 1.40 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கான தக்காராக பழனி கோவில் இணை ஆணையர் நீதிமன்ற உத்தரவின் பேரில் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் கோவில் நிர்வாகம் அந்த நிலத்தை நிர்வகித்து வருகிறது. ரூ.100 கோடி மதிப்பிலான அந்த நிலம் கடந்த ஆண்டு முதல் பக்தர்களின் வாகன நிறுத்துமிடமாக மாற்றப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 6ம் தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் அந்த நிலம் 2 பேருக்கு ரூ.2 கோடிக்கு கிரையமாக பத்திர பதிவு செய்யப்பட்டது. பழனி கோவில் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்த நிலத்தை பத்திர பதிவு செய்தது தொடர்பாக கோவில் நிலப்பிரிவு கண்காணிப்பாளர் முருகானந்தம் பழனி அடிவாரம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் பழனி சார்பதிவாளராக இருந்த ஜஸ்டின் மணிகண்டன், விழுப்புரத்தை சேர்ந்த முருகதாஸ், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்துள்ள பாப்பன்குளத்தை சேர்ந்த வெள்ளைத்துரை, பழனி டி.கே.என்.புதூரை சேர்ந்த சேதுபதி ஆகிய 4 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் தண்டபாணி சுவாமி மடத்தின் நிலத்தை தனியாருக்கு பத்திர பதிவு செய்தது செல்லாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து பழனி அடிவாரம் போலீசிடமிருந்து வழக்கு விசாரணை திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.
வழக்கு விசாரணைக்காக சி.பி.சி.ஐ.டி. மதுரை எஸ்.பி. ஷஜிதா திண்டுக்கல் நேருஜி நகரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு வருகை தந்தார். புகார் அளித்த கண்காணிப்பாளர் முருகானந்தம், செயல் அலுவலர் கணபதி, கண்காணிப்பாளர் சிவனேசன், கோவில் நிலங்கள் தொடர்பான பணிகளை மேற்கொண்ட ஓய்வு பெற்ற தாசில்தார் மாரியப்பன், ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ. சின்னச்சாமி ஆகியோர் திண்டுக்கல்லுக்கு வரவழைக்கப்பட்டனர்.
சம்பந்தப்பட்ட நிலம் தொடர்பான ஆவணங்களும் கொண்ட வரப்பட்டது. இதையடுத்து அவர்கள் 5 பேரிடமும் 4 மணிநேரம் எஸ்.பி. ஷஜிதா விசாரணை மேற்கொண்டார். இதனிடையே ஒட்டன்சத்திரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சஞ்சை காந்தியை வரவழைத்து மடத்துக்கு உரிய நிலம் சம்பந்தமான ஆவணங்களை பெற்றனர்.
தொடர் கிடுக்குப்பிடி விசாரணையால் தேவஸ்தான அதிகாரிகள், பதிவுத்துறை அதிகாரிகள், பணியாளர்கள் பலர் கலக்கத்தில் உள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனிடையே நிலத்தை விற்ற திருப்புகழ் சுவாமிகள், முருகதாஸ் சுவாமிகள் மற்றும் தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளை சார்ந்த முருகதாஸ், நிலத்தை வாங்கிய வெள்ளைத்துரை, சேதுபதி ஆகிய அனைவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களது செல்போன் எண்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. பத்திர பதிவு நாளில் சாட்சி கையெழுத்திட்டோரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களையும் போலீசார் சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.
முறைகேடாக கோவில் நிலத்தை விற்ற, வாங்கியவர்களின் புகைப்படத்தை வெளியிட வேண்டும் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வரும் நிலையில் நிலத்தை வாங்கிய சேதுபதியின் புகைப்படம் மற்றும் நிலம் தொடர்பான வில்லங்கச்சான்று இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
பத்திரப்பதிவு நடந்த விவரம் குறித்து நடந்த விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. பத்திர பதிவுக்கான ஆவணங்கள் கொடுத்தபோது பழனி சார்பதிவாளர் அதனை வாங்கியுள்ளார். ஆனால் தள்ளுபடி செய்யாமல் நிலுவையில் உள்ளதாக வைத்துவிட்டு விடுமுறையில் சென்றுவிட்டார். பின்னர் திண்டுக்கல் மாவட்ட பதிவாளர் சசிகலா, கொடைக்கானலில் பணியில் இருந்த ஜஸ்டின் மணிகண்டனை ஒருநாள் விடுமுறைக்காக வரவழைத்து ரூ.100 மதிப்பிலான நிலத்தை ரூ.2 கோடிக்கு பத்திர பதிவு செய்து கொடுத்துள்ளார். பதிவு முடிந்ததும் அவர் கொடைக்கானலுக்கு மீண்டும் பணிக்கு சென்று விட்டார். இதனால் இந்த முறைகேட்டில் பல அதிகாரிகள், பல அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் சசிகலாவிடமும் விசாரணை நடத்தினால் இந்த முறைகேட்டின் பின்புலமாக இருந்தவர்கள் யார் என தெரியவரும்.
சசிகலா கடந்த 6 ஆண்டுகளாக விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரிந்து வந்தவர். பல அதிகாரிகள் மாற்றப்பட்ட போதும் இவர் மட்டும் மாற்றப்படாமல் இருந்துள்ளார். எனவே இவருக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அரசியல் கட்சியினர் பின்புலமாக இருந்திருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளார்கள்.