தமிழக செய்திகள்

முடிவுக்கு வருமா பாட்டிலுக்கு ரூ.10 ஊழல்? டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு அறிவிப்பு!

ஊதிய உயர்வு அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரும்.

கடந்த திமுக ஆட்சியின்மீது தவெக தலைவர் விஜய் வைத்த முக்கிய குற்றச்சாட்டுகளில் ஒன்று ‘பாட்டிலுக்கு ரூபாய் பத்து’. அதாவது அரசின் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களுக்கு ரூ.10 கூடுதலாக வாங்கப்படுவதாக நீண்ட நாட்களாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இதனை தேர்தல் பிரச்சாரத்தில் தவெக கடுமையாக விமர்சித்திருந்தது. இச்சூழலில் தவெக ஆட்சி அமைந்தும் இந்த பத்து ரூபாய் கதை தொடர்ந்தது.

தவெக ஆட்சி அமைந்தும் பத்து ரூபாய் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து விமர்சனங்கள் எழு, இதுபோன்று பணம் பெறுபவர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவர்கள் உள்ளிட்ட எச்சரிக்கைகள் டாஸ்மாக் ஊழியர்களுக்கு அரசு தரப்பில் விடுக்கப்பட்டது.

இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்கள் தங்களுக்கு வெறும் ரூ.11 ஆயிரம்தான் மாத ஊதியம் என்றும், இதனால்தான் தாங்கள் கூடுதலாக ரூ.10 பெறுவதாகவும் பல்வேறு காரணங்களை முன்வைத்தனர்.

இந்நிலையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மது ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ்,

“முதலமைச்சர் விஜய், டாஸ்மாக் ஊழியர்களின் பிரச்னைகளை கருத்தில்கொண்டு அவர்களுக்கு 25% ஊதிய உயர்வு வழங்க கூறியுள்ளார். அதன்படி உதவி விற்பனையாளருக்கு ரூ.14,340லிருந்து ரூ. 17,925 ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்படும்.

விற்பனையாளர்களுக்கு ரூ.15,530லிருந்து ரூ.19,413 ஆக உயர்த்தப்படுகிறது. மேற்பார்வையாளருக்கு ரூ.17850லிருந்து, ரூ.22,313ஆக ஊதியம் உயர்த்தி வழங்கப்பட உள்ளது. இதுவரை டாஸ்மாக் துறையில் இந்தளவு ஊதிய உயர்வு வழங்கப்பட்டது இல்லை. இதன்மூலம் 110.74 கோடி ரூபாய் கூடுதலாக அரசுக்கு செலவு ஆகும்.

இனிமேல் கூடுதல் விலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுந்தால் பணிநீக்கம் வரை நடவடிக்கை இருக்கும். இனி மதுபானங்களை நிர்ணயிக்கப்பட்ட விலையில் ஊழியர்கள் விற்க வேண்டும் என்பதற்காக இந்த முன்னெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் இந்த ஊதிய உயர்வு அமலுக்கு வரும்.” என தெரிவித்தார்.