சென்னை அருகே கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடியை நொளம்பூர் போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
சென்னை, சின்ன நொளம்பூர், யூனியன் சாலையில் செல்வி என்பவரும் அவரது கணவர் முருகதாஸ் என்பவரும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
நேற்று இரவு செல்வியின் மகன்கள் சரத் மற்றும் சஞ்சய் ஆகியோர் வீட்டினருகே லாரியில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த உதயா என்பவருடன் தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, சஞ்சய் மற்றும் சரத் ஆகியோர் உதயாவை கையால் அடித்துவிட்டு வீட்டிற்கு சென்றதாகவும், பின்னர் சிறிது நேரம் கழித்து, உதயா தனது சகோதரர்கள் ராகேஷ், கார்த்திக் மற்றும் சில நண்பர்களை வரவழைத்து, சஞ்சய் மற்றும் சரத் ஆகியோரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து இருவரையும் கத்தியால் தாக்கியுள்ளார்.
தடுக்க சென்ற சஞ்சய் மற்றும் சரத்தின் தந்தை முருகதாஸையும் கத்தியால் தாக்கிவிட்டு கும்பல் தப்பியுள்ளது.
இதில், காயமடைந்த 3 நபர்களையும் மீட்டு கேஎம்சி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதில் சஞ்சய் என்பவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே இறந்துவிட்ட நிலையில், சரத் மற்றும் தந்தை முருகதாஸ் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதொடர்பாக, செல்வி என்பவர் கொடுத்த புகாரை தொடர்ந்து கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர்.
குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை விரைந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் அமல்ராஜ், உத்தரவிட்டதன்பேரில், காவல் உயரதிகாரிகள் ஆலோசனையின்பேரில், நொளம்பூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
தனிப்படை தீவிர வேட்டையில் இறங்கிய நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ரூபேஷ் என்பவரை பிடிக்கும்போது, அவர் காவலர்களை தாக்கிவிட்டு தப்ப முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது, காவல் குழுவினர் தற்காப்புக்காக ரூபேஷ் என்பவரின் கால் முட்டியில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய ரவுடிகளான நவீன்குமார், உதயராஜ், சூர்யா, கார்த்திக் ராஜா, ராகேஷ் ராஜா, மேஷாக், சூர்யபிரகாஷ் என மொத்தம் 8 பேரை கைது செய்தனர்.
இது தொடர்பாகநொளம்பூர் காவல் நிலைய காவல் குழுவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை சம்பவம் நிகழ்ந்த சில மணி நேரத்தில் சம்பந்தப்பட்டவரகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.