ஆர்.பி.உதயகுமார் 
தமிழக செய்திகள்

சட்டத்தின் பாதையில் தான் ஆட்சி சக்கரம் சுழல வேண்டும்- ஆர்.பி.உதயகுமார்

டெல்டா மாவட்ட விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள். இதற்கு என்ன போர்க்கால நடவடிக்கையை த.வெ.க. அரசு எடுத்திருக்கிறது.

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்கிய த.வெ.க. அரசின் உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் மதுரை கிளை அதிரடியாக உத்தரவை பிறப்பித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

டெல்டா பகுதி வறட்சி பகுதியாக நாம் பார்க்கிற போது நம் நெஞ்சம் பதறுகிறது. கர்நாடகா தண்ணீரை திறக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. ஜூன், ஜூலை மாதம் தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை கொடுக்காமல் பயிர்கள் காய்வதை பார்த்து டெல்டா மாவட்ட விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள். இதற்கு என்ன போர்க்கால நடவடிக்கையை த.வெ.க. அரசு எடுத்திருக்கிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், நாம் பெற வேண்டிய உரிமை பறிபோய் கொண்டே இருக்கிறது. மேல்முறையீடு செய்ய த.வெ.க அரசு நடவடிக்கை எடுக்குமா? மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு தமிழகத்தின் ஒப்புதல் தேவை இல்லை என்ற அதிரடி பதிலை மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்து இருப்பதால் அதிர்ச்சியிலே உறைந்து போய் இருக்கிறது தமிழகம்.

நீதியரசர்களின் தீர்ப்பே சாட்சி

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்கிய த.வெ.க. அரசின் உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் மதுரை கிளை அதிரடியாக உத்தரவை பிறப்பித்துள்ளது. தன்னை பார்க்க வந்தவர்கள் இறந்து போனார்கள் என்பதற்காக அரசு நிர்வாகத்தை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம், என்கிற கோமாளித்தனத்தை தலையில் கொட்டு வைத்து, சட்டத்தை புரிய வைத்து, சட்டத்தின் ஆட்சிதான் என்றைக்கும் மேலோங்கி இருக்கும் என்பதை நீதியரசர்கள் இந்த நாட்டிற்கு உணர்த்தியுள்ளார்கள்.

கோமாளி கூட்டத்திடம் கோட்டையை ஒப்படைத்தால், கோட்டையிலே ஓட்டை விழுந்து விடுகிறது என்பதற்கு தான் இன்றைக்கு ஐகோர்ட் தீர்ப்பு உச்சந்தலையில் ஆணி அடித்தது போல, மக்களின் பக்கம், சட்டத்தின் பக்கம், நியாயத்தின் பக்கம், தர்மத்தின் பக்கம் தான் ஆட்சி சக்கரம் சுழல வேண்டுமே தவிர, த.வெ‌.க. கட்சியை வளர்ப்பதற்கு அரசு எந்திரத்தை பயன்படுத்தினால் இப்படித்தான் சம்பட்டி அடி கிடைக்கும் என்பதற்கு இந்த நீதியரசர்களின் தீர்ப்பே சாட்சியாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.