தமிழக செய்திகள்

Ramzan | திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தர் தர்காவிற்கு சென்ற இஸ்லாமியர்கள் தடுத்து நிறுத்தம்

ரம்ஜான் நாளில் ஆண்டுதோறும் அமைதியான முறையில் தொழுகை நடத்தும் தங்களை ஒவ்வொருவராக அனுமதிப்பது ஏன் என அவர்கள் கேள்வி எழுப்பினர்.

மாலை மலர்

இஸ்லாமிய மார்க்கத்தின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான ஈகைத் திருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகை, இன்று தமிழகம் முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தர் தர்காவிற்கு தொழுகை நடத்தச்சென்ற இஸ்லாமியர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

ஒவ்வொருவராக பெயர், விபரம் கொடுத்த பின்னரே மலை மீது அனுமதிக்க முடியும். சர்ச்சைக்கு பின்னர் மலைப்பகுதிக்கு செல்பவர்களின் தகவல்களை பெறுவது வழக்கம் என போலீசார் கூறியதால் இஸ்லாமியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ரம்ஜான் நாளில் ஆண்டுதோறும் அமைதியான முறையில் தொழுகை நடத்தும் தங்களை ஒவ்வொருவராக அனுமதிப்பது ஏன் என அவர்கள் கேள்வி எழுப்பினர்.

காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு இஸ்லாமிய அமைப்பினரும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆண்டுதோறும் அமைதியான முறையில் தொழுகை நடத்தி வருகிறோம். ரம்ஜான் நாளில் ஒவ்வொருவராக அனுப்ப முயற்சிப்பது ஏற்புடையதல்ல. பண்டிகை காலத்தில் கட்டுப்பாடுகளை விதிப்பது மத நல்லிணக்கத்திற்கு ஆபத்தானது என்று தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்கா அருகே உள்ள தீப தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். ஆனால் இந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. இது தொடர்பான வழக்கு ஐகோர்ட் மதுரை கிளையில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.