கே.என்.நேரு  
தமிழக செய்திகள்

30 இடங்களில் சோதனை.. 241 ஆவணங்களை பறிமுதல் செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை - கே.என்.நேரு சொன்னது என்ன?

காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்றது.

திமுக முன்னாள் அமைச்சர் கே என் நேருவுக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் பிற்பகல் வரை நடைபெற்ற சோதனையில் 241 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கே.என். நேரு வீட்டில் சோதனை

அந்த வகையில் இன்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சென்னை, திருச்சி வீடுகள் மற்றும் அவரது சகோதரர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள்.

சென்னை

சென்னை மைலாப்பூர் மற்றும் திருச்சி தில்லைநகர் ஆகிய இடங்களில் உள்ள கே.என். நேருவுக்கு சொந்தமான இடங்களில் வீடுகளுக்கு இன்று காலை 7 மணி அளவில் சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினார்கள். திருவான்மியூர், அடையாறு, அண்ணா நகர், ராஜா அண்ணாமலைபுரம் ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

ராஜா அண்ணாமலை புரத்தில் கே.என். நேருவின் தம்பி ரவிச்சந்திரனுக்கு சொந்தமான தனியார் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திலும் சோதனை நடந்தது. இதேபோன்று திருச்சி, கோவை என மொத்தம் 19 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

கே.என். நேரு, தி.மு.க. ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது அந்த துறை சார்பில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த டெண்டர் ஒதுக்கீட்டில் தான் முறைகேடு நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையிலேயே இன்றைய சோதனை நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருச்சி

திருச்சி தில்லைநகர் 5-வது கிராசில் உள்ள கே.என். நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., மணிகண்டன் தலைமையிலான 10 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் இன்று காலை 7.30 மணியில் இருந்து சோதனையில் ஈடுபட்டனர். வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையிலும் அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர். முக்கிய ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

கோவை

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள கள்ளிமடை பகுதியில் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் வீடு மற்றும் அலுவலகம் உள்ளது. அதேபோன்று கோவை, மசக்காளி பாளையத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு உள்ளது. இந்த வீடுகள் மற்றும் அலுவலகத்திற்கு இன்று காலை கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் துணை சூப்பிரண்டு ராஜேஷ் தலை மையில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் காலை 7 மணிக்கு அதிரடியாக நுழைந்தனர்.

ஒவ்வொரு பகுதிக்கும் தலா 4 லஞ்ச ஒழிப்பு போலீசார் வீதம் சென்று அங்கு வீடு மற்றும் அலுவலகத்தில் அனைத்து பகுதிகளிலும் சோதனை செய்தனர்.

பறிமுதல்

சோதனையின் முடிவில் கிடைத்த தகவல்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி கே.என்.நேருவுக்கு தொடர்புடைய இடங்களில் நடத்திய சோதனையில் 241 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

அறிக்கையின்படி, தமிழகத்தில் கோவை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 30 இடங்களில் நடந்த சோதனையில் 241 ஆவணங்கள், மின்னணு சாட்சியங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் பல்வேறு ஒப்பந்தங்களில் முறைகேடு என்ற புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கே. என். நேரு பேட்டி

இதனிடையே திருச்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், "என் வீட்டில் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்றது. சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தோம். என்னை பொறுத்தவரை நான் எந்த தவறும் செய்யவில்லை. எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தை அணுகி சட்டப்படி வெல்வோம்.

சட்டசபையில் அரசை நோக்கி நான் கேள்வி எழுப்புவதால் என்னை மிரட்டுவதற்காக கூட இது போன்ற சோதனையை அவர்கள் செய்யலாம். இந்த சோதனை பழிவாங்கும் நடவடிக்கை" என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT