தமிழக செய்திகள்

தொகுதி மறுவரையறை மசோதா ஆதரவை பரிசீலிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி டுவிட்

தமிழ் விரோத சக்திகளுக்கு எதிராகத் தமது சகோதரர் மு.க.ஸ்டாலின் எப்போதும் ஒரு பாறை போல உறுதியாக நின்றுள்ளதாக ராகுல் காந்தி பாராட்டியுள்ளார்.

மக்களவைத் தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியலமைப்புத் திருத்த மசோதாக்களை எதிர்க்கக் கோரி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்திக்கத் தாம் சென்னை வரவுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா கூட்டணியின் மூத்த தலைவர்களும் தாமும் சென்னை சென்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைச் சந்திக்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, தொகுதி மறுவரையறை அரசியலமைப்புத் திருத்த மசோதாக்களை திமுக எதிர்க்க வேண்டும் எனத் தாம் வலியுறுத்த இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்திற்கு ஆபத்து

நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவது இந்திய ஜனநாயகத்தை முடிவுக்குக் கொண்டு வந்துவிடும் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்த நடவடிக்கை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு இந்தியாவின் ஒட்டுமொத்தத் தேர்தல் வரைபடத்தையும் தங்களுக்குச் சாதகமாக மாற்றியமைக்க எல்லையற்ற அதிகாரத்தை வழங்கிவிடும் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்புப் பாதுகாப்பு

தமிழ் விரோத சக்திகளுக்கு எதிராகத் தமது சகோதரர் மு.க.ஸ்டாலின் எப்போதும் ஒரு பாறை போல உறுதியாக நின்றுள்ளதாக ராகுல் காந்தி பாராட்டியுள்ளார். தேசத்தின் நலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கவும் இந்த மசோதாவை அனைவரும் ஒன்றிணைந்து தோற்கடிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

SCROLL FOR NEXT