ஆசியாவிலேயே மிகப்பெரிய மருத்துவமனை என்ற அந்தஸ்தை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை பெற்றுள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து தங்கி நோயாளிகள் சிகிச்சை பெறுகிறார்கள்.
வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் சிறப்பு சிகிச்சைகளுக்காக இங்கு வருவது உண்டு. மேலும் தினமும் 10 ஆயிரம் பேருக்கு மேல் புறநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியை பயன்படுத்துகிறார்கள்.
இதனால் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை அனைத்து மருத்துவ துறை சார்ந்த புறநோயாளிகள் பிரிவு பரபரப்பாக காணப்படும். புற நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கு முன்பு தங்கள் பெயர், விவரங்களை பதிவு செய்து சீட்டு பெற வேண்டும். 3-வது கோபுர கட்டிடத்தின் கீழ் பகுதியில் 12 கவுண்டர்களில் புற நோயாளிகள் சீட்டு வழங்கப்படுகிறது.
இங்கு எப்போதுமே நீண்ட வரிசை காணப்படும். நோயாளிகள் காத்திருந்து சீட்டுகளை பெற்றால் தான் சிகிச்சை பெற முடியும். கூட்டமும், காத்திருக்க வேண்டிய சூழலும் இருப்பதால் இதனை எளிமைப்படுத்த சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அருண் ராஜ் முடிவு செய்தார்.
புறநோயாளிகள் எளிதாக ஓ.பி.சீட் பெற்று செல்லும் வகையில் கியூ.ஆர். கோடு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அவர் அறிவித்தார்.
அதன்படி கடந்த சில நாட்களாக சோதனை அடிப்படையில் அங்கு கியூ.ஆர்.கோடு புறநோயாளிகள் சீட் வழங்கப்பட்டது. எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் இது செயல்பட்டதால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக கியூ. ஆர். கோடு மூலம் புறநோயாளிகள் சீட்டு பெறும் வசதி நடைமுறைக்கு வந்துள்ளது. நோயாளிகள் அல்லது உறவினர்கள் தங்களது செல்போன் மூலம் கியூ.ஆர். கோடை ஸ்கேன் செய்தால் ஓ.பி. சீட்டு அவர்களது செல்போனுக்கு வந்துவிடும்.
இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் சாந்தாராம் கூறியதாவது:-
புற நோயாளிகள் நுழைவு சீட்டு பெறுவதற்காக நீண்ட நேரம் காத்திருந்த நிலை இதன் மூலம் மாற்றப்பட்டு உள்ளது. வரிசையில் நிற்க தேவையில்லை. மருத்துவமனையின் நுழைவுப் பகுதியில் உள்ள 2 தூண்களில் கியூ.ஆர்.கோடு ஸ்கேனர் வைக்கப்பட்டுள்ளது.
ஒரு தூணில் 4 வீதம் 8 ஸ்கேனர் வைக்கப்பட்டுள்ளது. இதனை நோயாளிகள் தங்களது செல்போனில் ஸ்கேன் செய்தால் போதுமானது. ஆதார் எண்ணுடன் இந்த தொழில்நுட்பம் இணைக்கப்பட்டிருப்பதால், சிகிச்சை பெற வருகின்ற புறநோயாளிகள் பெயர் விவரம் போன்றவற்றை எளிதாக பதிவாகிவிடும், எந்த மருத்துவ பிரிவில் சிகிச்சை பெற வேண்டும் என்பதை மட்டும் பதிவிட வேண்டும்.
அதனைக் குறிப்பிட்டால் அவர்களது செல்போனுக்கு புற நோயாளிகள் சீட்டு சென்று விடும். அதனை சம்பந்தப்பட்ட மருத்துவ பிரிவுக்கு சென்று காண்பித்து சிகிச்சை பெறலாம். மிக எளிமையான முறையில் இந்த வசதியை பயன்படுத்த முடியும். கியூ.ஆர். கோடு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் பழைய சீட்டு நடைமுறையும் பயன்பாட்டில் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.