பொள்ளாச்சி:
தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பை வலியுறுத்தியும், தி.மு.க அரசை கண்டித்தும் அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கடந்த 17-ந் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சிலர், பெண்கள் குறித்து பேசிய பேச்சுக்கள் சர்ச்சையானது.
விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசும்போது, ஆட்சி முடிந்தும் போகும்போது, உங்கள் கனவை சொல்லுங்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் கேட்கிறார். எனக்கு நயன்தாரா வேண்டும். எனது கனவை நிறைவேற்றுவாரா என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
அவரது பேச்சுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், தென்னிந்திய நடிகர் சங்கம், பெண் அமைப்புகள் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தான் தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மன்னிப்பும் கேட்டார். தவறுதலாக நயன்தாராவின் பெயர் உச்சரிக்கப்பட்டு விட்டதாகவும், எந்தவிதமான உள்நோக்கத்துடன் அவரது பெயரை நான் குறிப்பிடவில்லை. இதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
இதேபோன்று திண்டுக்கல்லில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பெண்களின் மரியாதையை பாதிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டது. கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும், அரசின் திட்டங்களை விமர்சிப்பதாக கூறி பெண்களை உருவ கேலி செய்யும் வகையில் பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் சர்ச்சை பேச்சுக்கு பொள்ளாச்சியில் நூதனமுறையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு இருந்தது. முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோரின் கட்-அவுட்டுகளுக்கு செருப்பு மாலை அணிவித்தும், பாவாடை அணிவித்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பொள்ளாச்சி பஸ்நிலைய ரவுண்டானா, காந்தி சிலை சந்திப்பு, தேர்நிலை திடல் ஆகிய இடங்களில் இந்த கட்-அவுட்கள் மின்கம்பம் மற்றும் வழிகாட்டி பலகைகளில் கட்டி வைக்கப்பட்டு இருந்தது.
நேற்று இரவு யாரோ இந்த கட்-அவுட்களை கட்டிச் சென்றுள்ளனர். இன்று காலை அந்த கட்-அவுட்டுகளை பார்த்த அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அவர்கள் பொள்ளாச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று 3 பேரின் கட்-அவுட்டுகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
2 கட்சியினரிடையே மோதலை உருவாக்கும் வகையில் செருப்பு மாலை கட்-அவுட் கட்டியவர்கள் யார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.