மருந்து நிறுவனங்கள் தங்களது பிராண்ட் மருந்துகளை நோயாளிகளுக்குப் பரிந்துரை செய்ய வைக்க, மருத்துவர்களைக் கவர பல்வேறு வழிமுறைகளைக் கையாள்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவில் நீரிழிவு (சர்க்கரை) நோய்க்கான மருந்துகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் முன்னணி மருந்து நிறுவனங்கள் (Pharma Companies), ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு தேர்தல் பத்திரங்கள் மற்றும் நன்கொடைகள் மூலம் ரூ.400 கோடிக்கும் அதிகமான தொகையை வழங்கியுள்ளதாக திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் தளப் பதிவில் மிகக் கடுமையான குற்றச்சாட்ட முன்வைத்துள்ளார்.
இந்தியாவில் நீரிழிவு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து, வீடுகள்தோறும் சர்க்கரை நோயாளிகள் பெருகிவரும் இந்த வேளையில், மக்களின் உடல்நலப் பிரச்சனையை வைத்து அரசியல் கட்சிகள் நிதி திரட்டுவது மக்கள் நலனுக்கே எதிரானது என்று சாடியுள்ளார்.
மத்திய பாஜக அரசு Production Linked Incentive (PLI) திட்டத்தின் கீழ், இந்த குறிப்பிட்ட மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.6,000 கோடிக்கும் அதிகமான தொகையை அரசு மானியமாக வழங்கியுள்ளது. 2024-25ஆம் ஆண்டின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இந்தியாவில் சர்க்கரை நோய்க்கான மருந்துகளின் சந்தை மதிப்பு மட்டும் ரூ.15,000 கோடியை எட்டியுள்ளது. இதில் Sun Pharma, USV, Torrent, Lupin போன்ற முன்னணி பிராண்டுகள் 2025-26 நிதியாண்டில் மட்டும் பல ஆயிரம் கோடி ரூபாயை லாபமாகப் பெற்றுள்ளன.
இந்த மருந்து நிறுவனங்கள் தங்களது பிராண்ட் மருந்துகளை நோயாளிகளுக்குப் பரிந்துரை செய்ய வைக்க, மருத்துவர்களைக் கவர பல்வேறு வழிமுறைகளைக் கையாள்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதில், விலையுயர்ந்த பரிசுகள் மற்றும் அன்பளிப்புகள், வெளிநாட்டுச் சுற்றுலாக்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வரிச்சலுகைகள் மற்றும் இலவச மருந்து சாம்பிள்கள் ஆகியவற்றை சலுகைகளாக வழங்குகின்றன.
இதன் விளைவாக, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தனிநபரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் சராசரியாக ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை மருத்துவச் செலவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். நோயாளிகள் தங்கள் உயிரைக் காப்பாற்றச் செலவிடும் தொகையிலிருந்தே பாஜக தனது கட்சி நிதிக்கான பங்கைப் பெறுகிறது என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாஜக, எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்ற எண்ணத்துடன் கொள்ளையடிக்கிற நோக்கத்தில் குறியாக இருக்கிறது. இந்தியாவில் இப்போது எங்கு பார்த்தாலும் நீரிழிவு நோயாளிகள் இருக்கின்றனர். இந்தியாவில் போலியோ, அம்மை போன்ற பல தீவிர தொற்று நோய்களை வெற்றிகரமாக ஒழித்த வரலாறு உள்ளது. ஆனால், நீரிழிவு நோயை ஒரு பொது சுகாதாரப் பிரச்சனையாக மத்திய அரசு அணுகத் தவறிவிட்டது.
மாறாக, அதை ஒரு நிதி வசூலிக்கும் வாய்ப்பாகவே ஆளும் பாஜக பார்க்கிறது. சுப்ரீம் கோர்ட்டு தனது முக்கியத் தீர்ப்புகளில், "இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 21-ன் படி வாழ்வுரிமையின் பிரிக்க முடியாத ஒரு பகுதிதான் சுகாதார உரிமை எனத் தெளிவுபடுத்தியுள்ளது. ஆளும் அரசுகள் மக்களுக்கு இந்த சுகாதார உரிமையை இலவசமாகவும் நியாயமான முறையிலும் உறுதி செய்ய வேண்டுமே தவிர, கார்ப்பரேட் லாபத்திற்கும் அரசியல் கட்சி நிதிக்கும் வழியமைக்கக் கூடாது என மனோ தங்கராஜ் தனது வலியுறுத்தியுள்ளார்.