தமிழக செய்திகள்

கொள்முதலில் சிக்கல் - ஆவின் பால் வினியோகம் 30 சதவீதம் வரை சரிவு

ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியாளர்களான விவசாயிகளிடம் இருந்து ரூ.38-க்கு கொள்முதல் செய்கிறது.

வழக்கத்தைவிட ஆவின் பால் வினியோகம் 30 சதவீதம் வரை குறைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆவின் பால் நிறுவனம்

தமிழ்நாட்டில் தினமும் 1 கோடியே 50 லட்சம் லிட்டர் பால் தேவைப்படுகிறது. இதில் அரசின் ஆவின் பால் நிறுவனம் 32 முதல் 35 லட்சம் லிட்டர் வரையிலும், பிற தனியார் நிறுவனங்கள் சுமார் 1 கோடியே 20 லட்சம் லிட்டர் வரையிலும் பால் தேவையை பூர்த்தி செய்கிறது.

தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் சுமார் 16 லட்சம் லிட்டர் பால் வினியோகம் செய்யப்படுகிறது. இதுதவிர பிற பகுதிகளில் சுமார் 16 லட்சம் லிட்டர் முதல் 19 லட்சம் லிட்டர் வரை வினியோகம் செய்கின்றனர்.

பால் உற்பத்தி குறைவு

இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதத்துக்கு பிறகு பால் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டதால், பால் வினியோகம் செய்வதில் சிக்கல் நீடித்து வருகிறது. வடமாநிலங்களில் கடந்த ஆண்டு தோல் கட்டி நோயால் மாடுகள் இறந்ததால், அங்கும் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டு. அங்குள்ள நிறுவனங் களும் தென் இந்தியா பக்கம் திரும்பியுள்ளனர்.

ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியாளர்களான விவசாயிகளிடம் இருந்து ரூ.38-க்கு கொள்முதல் செய்கிறது. ஆனால் தனியார் நிறுவனங்கள் ரூ.48 வரை கொள்முதல் செய்கின்றன. இதனால் பெரும்பாலான பால் உற்பத்தியாளர்கள் தனியார் நிறுவனங்களுக்கு பாலை வழங்குகின்றனர்.

பால் கொள்முதல்

இது ஒருபுறம் இருக்க, ஏற்கனவே பால் உற்பத்தியும் குறைந்திருப்பதால், ஆவினுக்கு பால் கொள்முதல் குறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

அதாவது மொத்த தேவையான 32 லட்சம் முதல் 35 லட்சம் லிட்டரில் தற்போது சுமார் 25 லட்சம் லிட்டர் மட்டுமே பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனை ஈடுகட்ட மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கர்நாடகா மாநிலங்களில் இருந்து பால் மற்றும் வெண்ணெய்யாக வாங்கியும் அதன் மூலம் பாலை உற்பத்தி செய்து வினியோகம் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

20 முதல் 30 சதவீதம் வரை

இந்த தட்டுப்பாடு காரணமாக வழக்கத்தைவிட ஆவின் பால் வினியோகம் சுமார் 20 முதல் 30 சதவீதம் வரை குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

உதாரணமாக சென்னையில் 16 லட்சம் லிட்டர் பால் வினியோகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது 14 லட்சம் லிட்டர் மட்டுமே வினியோகம் செய்யப்படுவதாகவும், இதனை சரிசெய்ய ஆவின் நிர்வாகம் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.6-ம், முகவர்களுக்கான கமிஷனை ரூ.2-ல் இருந்து ரூ.5 ஆக உயர்த்தியும், ஆவின் பால் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.12 வரை உயர்த்தியும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நஷ்டத்தில் இருந்து மீள முடியும். அதே நேரம் தட்டுப்பாடு இல்லாமல் மக்களுக்கு பாலை வினியோகம் செய்ய முடியும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி கூறியிருக்கிறார்.