சிறையில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயலும் கைதிகளை சுட்டுப்பிடிக்கலாம் என்று சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் உத்தரவிட்டுள்ளார்.
தேனி மாவட்டம் தேக்கம்பட்டியில் மாவட்ட சிறை அமைந்துள்ளது. இங்கு 200 கைதிகளை அடைக்க வசதிகள் உள்ளன. ஆனால், இங்கு நேற்று முன்தினம் 334 விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த சிறையில் மொத்தம் 4 கட்டிட பிரிவுகளாக கைதிகள் அறைகள் உள்ளன.
3-வது பிரிவில் 92 கைதிகள் அடைக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் சிலர், சிறையில் இருந்து தப்பிச் செல்ல திட்டம் தீட்டினர். அந்த திட்டத்தை நிறைவேற்றும் வகையில் கைதி ஒருவர் நேற்று முன்தினம் இரவு வலிப்பு வந்ததுபோல் நடித்தார். உடனே சக கைதிகள், சத்தம் போட்டனர். அதைக்கேட்ட 2-ம் நிலை சிறைக்காவலர் ஸ்டாலின் பிரபு அந்த கைதிக்கு உதவுவதற்காக அறை கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது அவரை கைதிகள் சிலர் சரமாரியாக தாக்கிவிட்டு, அறையை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
கைதிகள் சிலர் சமையல் அறைக்கு சென்று கரண்டிகளை ஆயுதங்களாக கையில் எடுத்துக் கொண்டு வெளியே ஓடினர். அந்த சிறையில் 3 அடுக்காக கதவுகள் உள்ளன. முதல் கதவு பூட்டப்படாமல் இருந்தது. 2-வது கதவு பூட்டப்பட்டு அங்கு பாதுகாப்பு பணியில் சிறைக்காவலர் தங்கப் பாண்டி நின்றார். அவரை கரண்டியால் கைதிகள் தாக்கினர். அதில் அவருடைய காது பகுதியில் பலத்த ரத்தக்காயம் ஏற்பட்டது. அவரிடம் இருந்து சாவியை பறித்து அந்த கதவை திறந்து பிரதான நுழைவு வாயிலுக்கு கைதிகள் ஓடி வந்தனர். உடனே சிறைக்காவலர்கள் அவர்களை பிடிக்க முயன்றனர். பிரதான நுழைவு வாயில் பகுதியிலும் காவலர்களை தாக்கிவிட்டு 17 கைதிகள் அங்கிருந்து தப்பி ஓடினர். இந்த சம்பவத்தின்போது காயம் அடைந்த போலீசார் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து மதுரை சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் கண்டமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், தப்பி ஓடியவர்கள் மீது 8 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டது. சிறையில் இருந்து சுமார் 10 கி.மீ. சுற்றளவில் உள்ள இடங்களில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.
போலீசாரின் தேடுதல் வேட்டையின்போது, சிறைக்கு அருகில் ஒரு இருள் சூழ்ந்த பகுதியில் தப்பி ஓடிய கைதி பிரவீன்குமார்(வயது 25) பதுங்கி இருந்தார். போலீசாரை பார்த்தவுடன் அவர் சரண் அடைந்து விடுவதாக தெரிவித்தார். உடனே அவரை போலீசார் சிறைக்குள் அழைத்துச் சென்று அடைத்தனர்.
17 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விடிய விடிய தேடுதல் வேட்டை நடந்தது. இதில் தப்பி ஓடிய ராஜா சிக்கந்தர்(24), ராஜ்குமார் (20) ஆகியோரை சிறைக்கு பின் பகுதியில் தனிப்படை போலீசார் நேற்று அதிகாலை கைது செய்தனர். மற்றொரு கைதியான சிலம்பரசனை (24) திருமலாபுரம் விலக்கு பகுதியில் வைத்து கைது செய்தனர். மாற்றுத்திறனாளி கைதியான பிரசாந்த் (25) என்ற லிங்கப்பிரசாந்த் தேக்கம்பட்டியில் இருந்து க.விலக்கு நோக்கி ஆட்டோவில் பயணம் செய்தபோது நேற்று பகலில் போலீசார் துரத்திப் பிடித்து கைது செய்தனர்.
மேலும் தப்பி ஓடியவர்களை பிடிக்க டிரோன் பறக்கவிட்டு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். எம்.சுப்புலாபுரம்-அம்மச்சியாபுரம் இடையே உள்ள மலைப்பகுதியில் டிரோன் மூலம் தேடுதல் வேட்டை நடத்தியபோது அங்கு 8 பேர் பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு கே.எஸ்.பிரவீன் கவுதம் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர்.
அங்கு பதுங்கி இருந்த கருப்பசாமி (25), தருண்குமார் (25), பாண்டிசெல்வம் (25), சபரிநாதன் (23), நிஷாந்த் (22), முத்து இளங்கோவன் (22), கார்த்திக்ராஜா (36). சேலைமுகிலேஸ்வரன் (28) ஆகிய 8 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். கைதானவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தப்பி ஓடிய 17 பேரில், 13 பேரை 24 மணி நேரத்துக்குள் போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் சிறையில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயலும் கைதிகளை சுட்டுப்பிடிக்கலாம் என்று சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது. புழல், தேனி சிறைகளில் இருந்து கைதிகள் தப்பிய நிகழ்வை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
அனைத்து சிறை கண்காணிப்பு கோபுரங்களிலும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் இருக்க வேண்டும்.
சிறைகளில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் துப்பாக்கியை போலீசாருக்கு பயன்படுத்தலாம்.
சிறையில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயலும் கைதிகளை சுட்டுப்பிடிக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளார்.