

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் மாவட்ட சிறைச்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் 3 பிளாக்குகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில் நேற்று இரவு ஒரு பிளாக்கில் கைதி ஒருவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாக மற்ற கைதிகள் கூச்சலிட்டுள்ளனர். இதையடுத்து அந்த பிளாக்கில் காவலில் இருந்த சிறை காவலர்கள், சிறைக் கதவை திறந்து உள்ளே சென்றனர். அப்போது உள்ளே இருந்த சிறை கைதிகள் திடீரென போலீசாரை கண்மூடித்தனமாக தாக்கத் தொடங்கினர். மேலும் சமையலுக்காக பயன்படுத்தப்படும் கரண்டி உள்ளிட்ட பாத்திரங்களால் போலீசாரை சரமாரியாக தாக்கியதில் 2 போலீசார் காயமடைந்தனர்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அங்கிருந்த 17 கைதிகளும் கண் இமைக்கும் நேரத்தில் சிறையை விட்டு தப்பி ஓடினர். இதனைக் கண்ட சிறையில் இருந்த மற்ற போலீசார் தப்பி ஓடிய கைதிகளை விரட்டிப் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்களையும் தாக்கி விட்டு அனைவரும் இருட்டில் ஓடி மறைந்தனர். அடுத்தடுத்த கதவுகளை திறந்து கொண்டு 4 போலீசாரை தாக்கி விட்டு மெயின் கேட்டையும் திறந்து 17 பேரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனைத் தொடர்ந்து சிறை கண்காணிப்பாளருக்கும், மாவட்ட எஸ்.பி. பிரவீன் கவுதமுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்த தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கவுதம் தேக்கம்பட்டி சிறைச்சாலைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். மேலும் காயமடைந்த 4 போலீசாரையும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தென் மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி நேரில் வந்து ஆய்வு செய்தார். பின்னர் தப்பி ஓடிய கைதிகளை பிடிப்பதற்காக 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உடனடியாக திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும், கேரள எல்லைப்பகுதிகளிலும் தேடுமாறு உத்தரவிட்டார்.
இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் தப்பி ஓடிய 3 பேர் கொலை குற்றங்களுக்காக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தப்பியோடிய கைதிகள் திட்டமிட்டு சமயம் பார்த்து போலீசாரை தாக்கி விட்டு தப்பி சென்றது தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே சிறைச்சாலைக்கு அருகில் உள்ள மலைப்பகுதியில் பதுங்கி இருந்த பிரவீன் என்ற கைதியை போலீசார் 1 மணி நேரத்தில் மடக்கி பிடித்தனர். அவரை மீண்டும் சிறையில் அடைத்தனர். மீதமுள்ள 16 கைதிகளை தேடும் பணியில் ஈடுபட்ட நிலையில் தேவாரத்தைச் சேர்ந்த சிலம்பரசன், மேலமடையைச் சேர்ந்த ராஜா சிக்கந்தர், சுந்தர்ராஜபுரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் ஆகிய 3 பேரை போலீசார் அடுத்தடுத்து பிடித்து சிறையில் அடைத்தனர்.
சிறைக் கைதிகள் தப்பிச்சென்ற சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தப்பி சென்றவர்களை பிடிக்க தேனி மாவட்டம் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் கேரள மாநில எல்லை பகுதிகளிலும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
திண்டுக்கல், பழனி உள்ளிட்ட பகுதிகளில் பஸ்சில் பயணம் செய்த பயணிகளையும் இரவு நேரத்தில் போலீசார் சோதனை நடத்தினர். விடுதிகளில் தங்கி உள்ளனரா? என்றும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடிய விவகாரத்தில் பணியில் இருந்த சிறைக்காவலர்கள் 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
2 தலைமை சிறைக்காவலர்கள், ஒரு முதல்நிலை சிறைக்காவலர், 2-ம் நிலை சிறைக்காவலர் 6 பேர் சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கைதிகள் தப்பிய தேனி தேக்கம்பட்டி கிளைச்சிறையில் சிறைத்துறை டிஜிபி நேரில் ஆய்வு செய்தார்.