தமிழக செய்திகள்

Pride Month 2026: ரிப்பன் மாளிகையில் தொடங்கிய கையெழுத்து இயக்கம்!

ஒவ்வொரு நபரின் சமத்துவம், கண்ணியம், பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கத்தை மதிக்கும் சமூகத்தை உருவாக்க வேண்டும்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகம் மூலம், பெருமை மாதம் 2026-ஐ முன்னிட்டு, சமத்துவம், பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றை வெற்றிகரமாக நடத்தியது.

மாதம் முழுவதும் நடைபெற்ற நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, ரிப்பன் கட்டடம் கடந்த 23ம் தேதி முதல் 30ம் தேதி வரை வானவில் நிறங்களில் ஒளிரச் செய்யப்பட்டு சமூகத்துடன் ஒற்றுமை வெளிப்படுத்தப்பட்டது.

மேலும், மெரினா கடற்கரையில் மணல் சிற்ப விழிப்புணர்வு நிகழ்ச்சி, கலை மற்றும் பண்பாட்டு நிகழ்வுகள் மூலம் பன்முகத்தன்மையை கொண்டாடிய "வண்ணங்கள்" பண்பாட்டு நிகழ்ச்சி மற்றும் சம உரிமை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கத்தை வலியுறுத்தும் வகையில் சமூக உறுப்பினர்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் ஆதரவாளர்கள் பங்கேற்ற பெருமை நடை ஆகிய நிகழ்வுகள் சிறப்பாக நடத்தப்பட்டன.

இதனை தொடர்ந்து கையெழுத்து இயக்கம் இன்று நடைபெற்றது. பாலின அடையாளம் அல்லது பாலியல் நோக்குநிலை எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு நபரின் சமத்துவம், கண்ணியம், பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கத்தை மதிக்கும் சமூகத்தை உருவாக்குவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பெருநகர சென்னை மாநகராட்சியின் வாயிலாக சிறப்பாக நடத்தப்பட்டன.

இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் சமீரன், இணை ஆணையாளர்கள் முனைவர் ஜெயசீலன், கற்பகம், சரவணன் ஆகியோர் கையெழுத்திட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.