தமிழக செய்திகள்

மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு

மற்ற மாநிலங்களுக்கான மாநிலங்களவை வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரவீண் சக்ரவர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று, கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கான மாநிலங்களவை வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

முதல்வர் விஜய்யை சந்தித்து காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கோரிக்கை வைத்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸுக்கு வழங்குவதாக விஜய் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இம்மாதம் 18ஆம் தேதி தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட உள்ள மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில், தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது.

அ.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சி.வி. சண்முகம் தனது பதவியை ராஜிநாமா செய்த நிலையில், ஜூன் 18-ஆம் தேதியன்று மாநிலங்களவை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. மாநிலங்களவை இடைத்தேர்தலில் த.வெ.க. சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்பதவி காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரவீண் சக்ரவர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கர்நாடகத்தில் மல்லிகார்ஜுன கார்கே, பவன் கேரா, மன்சூர் அலி கான் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று மத்திய பிரதேசத்தில் மீனாட்சி நடராஜன், ராஜஸ்தானில் நீரஜ் டாங்கி, ஜார்க்கண்டில் பிரணவ் ஜா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.