நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகன் சின்னராசு (35). இவர் நேற்று இரவு திருச்செங்கோட்டில் இருந்து பரமத்திவேலூர் செல்வதற்காக அரசு பஸ் ஏறி பயணம் செய்து உள்ளார். அப்போது செல்போனில் பேசிக் கொண்டிருந்த அவர் மறுமுனையில் இருந்தவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உணர்ச்சிவசப்பட்டு பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நல்லூர் அருகே கவுண்டிபாளையம் அருகே பஸ் பரமத்திவேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது திடீரென சின்னராசு ஓடும் பஸ்சில் இருந்து குதித்துள்ளார். இதனை பார்த்த பஸ் டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார். பஸ்சில் இருந்த மற்ற பயணிகள் உடனடியாக கீழே இறங்கி 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே சின்னராசு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சின்னராசு உடன் செல்போனில் மறுமுனையில் பேசியது யார் என்ன காரணத்திற்காக அவர் ஓடும் பஸ்சில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.