தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனாலும் த.வெ.க.விற்கு பெரும்பான்மை இல்லை என கூறி தமிழக கவர்னர் அக்கட்சியின் தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. கவர்னரின் இந்த செயலைக் கண்டித்து, தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை அண்ணாசாலையில் நேற்று கண்டன போராட்டம் நடைபெற்றது.
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், மூத்த தலைவர் கே.வி.தங்கபாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் எஸ்.ஏ.வாக, மாநில செயலாளர்கள் அகரம் கோபி, சுரேஷ்பாபு, பொதுக்குழு உறுப்பினர் கராத்தே ரவி, சென்னை மாவட்ட பொறுப்பாளர் எஸ்.கே.ஏ.அகமது அலி, முன்னாள் தலைவர் சிவராஜ சேகரன், வக்கீல் தொண்டன் சுப்பிரமணி, பகுதி செயலாளர் தணிகாசலம் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.
போராட்டத்தின்போது காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பேசுகையில், "த.வெ.க.வை ஆட்சி அமைக்க விடக்கூடாது என மத்திய மந்திரி அமித்ஷா, கவர்னருக்கு கடும் அழுத்தம் கொடுத்து வருகிறார். பா.ஜ.க. ஒரு எம்.எல்.ஏ.வை வைத்துக்கொண்டு கவர்னர் வழியாக தமிழகத்தை ஆள துடிக்கிறது. தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் த.வெ.க.விற்கு ஆதரவு அளிக்க வேண்டும்" என்றார்.
இந்த நிலையில், கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் மீது சிந்தாதரிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்ட நிர்வாகிகளின் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.