கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே பாமகவினர் கொடியைப் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளரை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த சிலர் பாமகவின் கொடியை ஏந்தி அசைத்துக் கொண்டிருந்தனர்.
நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அதிமுக, தவெக, திமுக உள்ளிட்ட எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவு அளிப்பதில்லை என்றும், பிரசாரத்தில் ஈடுபடுவதில்லை என்றும் பாமக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில், பாமகவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை மீறும் வகையிலும், கட்சியின் அனுமதியின்றியும் அதிமுக கூட்டத்தில் பாமக கொடி பயன்படுத்தப்பட்டது பாமகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அதிமுக பிரசார கூட்டத்தில் பாமக கொடி பறப்பதைத் தெரிந்துகொண்ட அப்பகுதி பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கட்சியின் தலைமை முடிவுக்கு எதிராக அனுமதியின்றி கொடியைப் பயன்படுத்தியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாமகவினர், கூட்டத்தில் கொடியை அசைத்துக் கொண்டிருந்தவர்களிடம் இருந்து பாமக கொடியை அதிரடியாகப் பறித்துச் சென்றனர்.
கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே பாமகவினர் கொடியைப் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது. இடைத்தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாமக வாக்குகளைக் கவர நடக்கும் அரசியல் மோதல்களும், இந்த கொடி பறிப்புச் சம்பவமும் மதுராந்தகம் தொகுதி தேர்தல் களத்தில் மேலும் சூட்டை ஏற்றியுள்ளது.