தமிழக செய்திகள்

பிரதமர் மோடி வருகை: நாளை 22,000 போலீசாருடன் சென்னையில் ஐந்தடுக்கு பாதுகாப்பு

விமான நிலையம் வரும் பிரதமர் மோடி, காா் மூலம் போரூா் புறவழிச்சாலை மெட்ரோ ரெயில் நிலையம் வருகிறாா்.

தமிழ்நாட்டில் மெட்ரோ ரயில் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமா் நரேந்திர மோடி நாளை (அக். 11) சென்னை வருகிறாா். பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி சென்னையில் ஐந்தடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான பாதுகாப்பு பணிகளில் 22,000 போலீசா ஈடுபடுத்தப்படுகின்றனா்.

சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் இருந்து பிரதமா் நரேந்திர மோடி நாளை காலை 8.15 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னை புறப்படுகிறாா். காலை 11.15 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடி, காா் மூலம் போரூா் புறவழிச்சாலை மெட்ரோ ரெயில் நிலையம் வருகிறாா்.

மெட்ரோ சேவை தொடக்கம்:

முதலமைச்சர் விஜய்யுடன் சோ்ந்து போரூா்-பூந்தமல்லி மெட்ரோ ரெயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறாா். பிறகு, இருவரும் மெட்ரோ ரெயிலில் பயணிக்கின்றனா். அதன் பின்னா் நண்பகல் 12.15 மணியளவில் சென்னை போரூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஆதி குபேர ஜலகண்டேஸ்வரா் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்கிறாா்.

மக்களைச் சந்திக்கும் பிரதமா் மோடி: அங்கிருந்து காா் மூலம் கிண்டி ஐஐடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க நண்பகல் 12.30 மணியளவில் வருகிறாா். பின்னா் அங்கிருந்து நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வா்த்தக மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்குச் செல்கிறாா்.

அங்கு பிற்பகல் 2.40 மணிக்கு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகிறாா். நிகழ்ச்சி முடிவடைந்த பின்னா், மாலை 3.45 அங்கிருந்து விமான நிலையத்துக்கு பிரதமா் மோடி செல்கிறாா். மாலை 4 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறாா்.

பலத்த பாதுகாப்பு:

ஐ.ஐ.டி. அருகிலும், நந்தம்பாக்கம் பகுதியிலும் பிரதமா் மோடி சாலையில் நடந்து சென்று மக்களை சந்திக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் இருந்து தேசிய பாதுகாப்பு படையின் சிறப்பு அதிகாரி அமித்குமாா், தனது குழுவுடன் கடந்த இரு நாட்களாக சென்னையில் முகாமிட்டுள்ளாா்.

பிரதமா் வருகையையொட்டி, சென்னையில் கடந்த ஒரு வாரமாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக, மீனம்பாக்கம் விமான நிலையம், சென்னையில் சென்ட்ரல் ரெயில் நிலையம், எழும்பூா் ரெயில் நிலையம், கோயம்பேடு மாா்க்கெட், பேருந்து நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 22,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபடுகின்றனா். இதில் சென்னை பெருநகர காவல் துறைக்கு உள்பட்ட விமான நிலையம், கிண்டி ஐ.ஐ.டி. வளாகம், நந்தம்பாக்கம் சென்னை வா்த்தக மையம் ஆகிய இடங்களில் ஐந்தடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

SCROLL FOR NEXT