தமிழக செய்திகள்

பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ ரெயில் தொடக்க விழா - பிரதமர் மோடி நாளை சென்னை வருகை

‘ரோடுஷோ’ நடைபெறும் பகுதியில் 20 இடங்களில் மேடைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கலை மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

முதலமைச்சர் விஜய் முன்னிலையில் நடைபெறும் விழாவில் பூந்தமல்லி- வடபழனி இடையேயான மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை சென்னை வருகிறார்.

நாளை காலை 11 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னை வரும் பிரதமர் மோடி அங்கிருந்து கார் மூலம் போரூர் செல்கிறார். போகும் வழியில் விமான நிலையம் முதல் பரங்கிமலை ராணுவ மைதானம் வரை செங்கல்பட்டு வடக்கு, சென்னை கிழக்கு, காஞ்சிபுரம் மாவட்ட பாஜகவினர் திரண்டு வரவேற்பு அளிக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை மாநில செயலாளர் வினோஜ் செல்வம் செய்து வருகிறார்.

மோடி-விஜய் ரெயில் பயணம்

பிரதமர் மோடி போரூர் மெட்ரோ ரெயில் நிலை யத்தை சென்றடைந்ததும் முதலமைச்சர் விஜய், பிரதமர் மோடியை வரவேற்கிறார்.

அதன் பிறகு இருவரும் போரூரில் இருந்து பூந்தமல்லி வரை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்கிறார்கள். அதே ரெயிலில் திரும்பி போரூர் வருகிறார்கள். இந்த பயணத்தின்போது பிரதமர் மோடி தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.

அதன் பின்னர் போரூரில் இருந்து காரில் சென்னை ஐ.ஐ.டி.யில் விழா நடைபெறும் திடலுக்கு வருகிறார்.

‘ரோடுஷோ’

செல்லும் வழியில் சைதாப்பேட்டை கோர்ட்டு முதல் கவர்னர் மாளிகை வரை பிரதமர் மோடி ‘ரோடுஷோ’ செல்கிறார். இதற்காக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் ஏற்பாட்டில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

சென்னை தெற்கு, மத்திய சென்னை மேற்கு, மத்திய சென்னை கிழக்கு, வடசென்னை கிழக்கு, வடசென்னை மேற்கு மாவட்டங்களை சேர்ந்த கட்சி தொண்டர்கள் அந்த மாவட்ட தலைவர்கள் குமார், லதா சண்முகம், சஞ்சீவி, கிரி, நாகராஜ், பாலாஜி தலைமையில் திரண்டு வரவேற்கிறார்கள்.

‘ரோடுஷோ’ நடைபெறும் பகுதியில் 20 இடங்களில் மேடைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கலை மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடக்கிறது. நிகழ்ச்சி நடைபெறும் மேடைகள் முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கூண்டு வடிவத்தில் அமைக்கப்படுகிறது.

‘ரோடுஷோ’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தொண்டர்கள், கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் கலைஞர்கள் காலை 10 மணிக்கே வந்துவிட வேண்டும். தீவிர சோதனைக்கு பிறகு அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக 12 இடங்களில் மெட்டல் டிடெக்டர் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களும், தொண்டர்களும் நிற்பதற்காக 2 அடுக்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்படுகிறது. தடுப்பு வேலிகளுக்கு வெளியே போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள்.

ஒரு டன் பூக்கள்

‘ரோடுஷோ’ செல்லும் பிரதமர் மோடியை பூக்கள் தூவி வரவேற்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒரு டன் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற உதிரி சாமந்தி பூக்களுக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். இந்த பூக்கள் பாதுகாப்பு சோதனைகளுக்கு பிறகு கவர்களில் பொதுமக்களிடம் வழங்கப்படும்.

‘ரோடுஷோ’வில் பொதுமக்கள் வரவேற்பை ஏற்றுக்கொண்டு பகல் 12.30 மணிக்கு பிரதமர் மோடி ஐ.ஐ.டி.யில் விழா நடைபெறும் இடத்துக்கு வருகிறார்.

விழாவுக்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு உள்ளது. 4 ஆயிரத்து 500 பேர் அமர இருக்கை வசதி செய்யப்பட்டு உள்ளது. இதில் பா.ஜ.க. மற்றும் த.வெ.க.வினருக்கு தலா ஆயிரம் பாஸ் வழங்கப்பட்டு உள்ளது. இது தவிர 7 அரசு துறைகளை சேர்ந்தவர்களுக்கும் பாஸ் வழங்கப்பட்டு உள்ளது.

விழாவில் கலந்து கொள்ள செல்பவர்கள் தண்ணீர் பாட்டில்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை. எனவே பந்தல் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மெட்ரோ வாட்டர் மூலம் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.

மெட்ரோ ரெயில் சேவை

முதலமைச்சர் விஜய் முன்னிலையில் நடைபெறும் விழாவில் பூந்தமல்லி- வடபழனி இடையேயான மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அதன் பிறகு முடிவுற்ற சில திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

அதை தொடர்ந்து ஐ.ஐ.டி. இயக்குனர் காம கோடியுடன் ஐ.ஐ.டி. வளாகத்தையும் பிரதமர் மோடி பார்வையிடுகிறார். பின்னர் இசை அமைப்பாளர் இளையராஜாவின் இசை பயிற்சி மையத்தையும் தொடங்கி வைக்கிறார்.

ஜலகண்டேசுவரர் தரிசனம்

பின்னர் ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள புகழ் பெற்ற ஜலகண்டேசுவரர் ஆலயத்துக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். இந்த நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு காரில் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்துக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் ஜெய்கோபால் கரோடியா பள்ளியின் 50-வது பொன் விழாவை தொடங்கி வைக்கிறார்.

சென்னை நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மாலையில் விமான நிலையம் திரும்பும் பிரதமர் மோடி தனி விமானத்தில் டெல்லி திரும்புகிறார்.

பலத்த பாதுகாப்பு

பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

சென்னை பழைய விமான நிலையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் நேற்று முதல் நாளை இரவு வரை 3 நாட்களுக்கு எஸ்.பி.ஜி. அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த 3 நாட்களுக்கும் விமான நிலையத்தில் உச்சக் கட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

விமான நிலையப் பகுதிகளில் டிரோன்கள், காற்று அடைக்கப்பட்ட பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரியர், கார்கோ நிறுவனங்களின் நிரந்தர ஊழியர்கள் புகைப்பட அடையாள அட்டைகளை அணிந்து பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. ஓடுபாதை பராமரிப்புப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் தற்காலிகப் பணியாளர்கள் பணிபுரிய வும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

விமான நிலையத்தைச் சுற்றியுள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் தீவிர சோதனை நடத்தவும், சந்தேகத்துக்கிடமான நபர்களை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கமான மூன்றடுக்கு பாதுகாப்புடன் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் ஞாயிற்றுக் கிழமை இரவு வரை அமலில் இருக்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

22 ஆயிரம் போலீசார்

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். இதில் சென்னை பெருநகர காவல் துறைக்கு உள்பட்ட விமான நிலையம், கிண்டி ஐ.ஐ.டி. வளாகம், நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையம் ஆகிய இடங்களில் ஐந்தடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

மேலும் 5 கூடுதல் காவல் ஆணையர்கள், 8 இணை ஆணையர்கள், 29 துணை ஆணையர்கள், 80 உதவி ஆணையர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் ஏ.அமல்ராஜ் தலைமையில் செய்யப்பட்டு உள்ளது.

போரூர் புறவழிச்சாலை மெட்ரோ ரெயில் நிலையம், ஸ்ரீ ஆதி குபேர ஜலகண் டேஸ்வரர் ஆகிய இடங்களில் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். இங்கேயும் ஐந்தடுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. பிரதமர் மோடி, மெட்ரோ ரெயிலில் பயணிப்பதால், அந்த மெட்ரோ ரெயில் பாதை முழுவதும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகின்றனர்.

SCROLL FOR NEXT