கோவையில் பெரியார் நூலகத்தை முதலமைச்சர் விஜய் நாளை திறந்து வைக்கிறார். இதையொட்டி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை காந்திபுரத்தில் சிறைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ரூ.300 கோடியில் பெரியார் அறிவுலகம் எனப்படும் பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டப்பட்டு உள்ளது. இதன் கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் நாளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார். 1 லட்சத்து 98 ஆயிரம் சதுர அடியில் தரைத்தளம் மற்றும் 7 தளங்களு டன் இந்த நூலகம் அமைந்து உள்ளது.
நாளை திறப்பு விழா நடைபெறுவதை முன்னிட்டு நூலகம் அழகுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. நூலக வளாகத்தில் அழகிய புல்வெளிகள் அமைக்கப்பட்டு வருகின்றது. மேலும் கட்டிடம் முழுவதும் அலங்கார மின் விளக்குகளால் ஜொலிக்கிறது.
முதலமைச்சர் விஜய் நாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு காலை 11 மணிக்கு வருகிறார். அங்கு அவரை அமைச்சர்கள், கலெக்டர் மற்றும் அதிகாரிகள் புத்தகம் கொடுத்து வரவேற்கின்றனர். பின்னர் கோவை விமான நிலை யத்தில் இருந்து விழா நடைபெறும் இடத்திற்கு காரில் முதலமைச்சர் செல்கிறார். அங்கு காலை 11.45 மணிக்கு நூலக வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள பெரியார் சிலையை முதலமைசச்ர் திறந்து வைத்து, நூலகம் மற்றும் அறிவியல் மையத்தை பார்வையிடுகிறார்.
முதலமைச்சர் 12.20 மணிக்கு விழா நடைபெறும் மேடைக்கு வருகிறார். அனைவரையும் அமைச்சர் சம்பத்குமார் வரவேற்கிறார். பின்னர் முதலமைச்சர் விஜய் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். முடிவில் கலெக்டர் பவன்குமார் நன்றி கூறுகிறார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் காரில் புறப்பட்டு மதியம் 1.40 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
திறப்பு விழாவை முன்னிட்டு பெரியார் நூலக வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவினாசி ரோடு புதிய மேம்பாலத்தின் உப்பிலிபாளையத்தில் உள்ள ரவுண்டானாவில் புல்வெளி மற்றும் அலங்கார செடிகள் அமைத்து அழகுப்படுத்தப்படுகிறது.
முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு விமான நிலையம் முதல் பெரியார் நூலகம் வரையும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதுதவிர ஏற்கனவே உள்ள சிவப்பு மண்டல பகுதிகளுடன், அவினாசி ரோடு, காந்திபுரம், விழா நடைபெறும் இடம் உள்ளிட்ட பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது.