தமிழக செய்திகள்

தேனிசைத் தென்றல் தேவா மறைவு - சிபிஎம் இரங்கல்

தேவா 40 ஆண்டுகளில் 450 திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார்

இசையமைப்பாளர் தேவா திடீர் மாரடைப்பு காரணமாக சென்னையில் உயிரிழந்தார். கானா இசையைத் தமிழ் திரைவுலகின் முக்கிய இடத்திற்கு கொண்டுவந்தவர்.இதன் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்திருந்தார்.இவரின் மறைவு தென்னிந்திய திரையுலகிற்கு ஈடு செய்ய இயலா இழப்பு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பெ.சண்முகம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

புகழ்பெற்ற இசையமைப்பாளரான "தேனிசைத் தென்றல்" தேவா அவர்களின் மறைவு தென்னிந்திய திரையுலகிற்கு பெரும் இழப்பாகும். 40 ஆண்டுகளில் 450 திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். தமிழ் மட்டுமல்ல கன்னடம், தெலுங்கு திரைப்படங்களுக்கும் இவரது இசைப் பங்களிப்பு இருந்திருக்கிறது.

சிறந்த கலை ஆளுமையை தமிழ்நாடு இழந்துள்ளது

எளிய மக்களின் வாழ்க்கையை, பாடுகளை உள்ளடக்கிய கானா வடிவம் இவரால் திரைப்படங்களில் அறிமுகம் ஆகி எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தது.1986 2026 வரையிலான இவரின் இசைப் பயணம் கலையுலக வரலாற்றில் அழியாப் பதிவுகளாக நிலைத்து நிற்கும். கலை மாமணி விருது பெற்றவர். "பாட்ஷா" "அருணாச்சலம்" "ஆசை" "வாலி" உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்கள் இவரின் இசையில் உருவானவை.

அவரே பாடல்களை எழுதி பாடியவர். இசையின் பல்வேறு பரிமாணங்களிலும் தனது அற்புதமான ஆற்றலை வெளிப்படுத்திய கலை ஆளுமையை தமிழ்நாடு இழந்திருக்கிறது.மறைந்த தேவா அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது நெஞ்சார்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறது. அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும். ரசிகர்களுக்கும் ஆறுதல்களை தெரிவித்துக் கொள்கிறது.

என்று குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT