முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி என்ற கதையை நாம் அனைவரும் படித்திருப்போம்.
அதேபோன்று கள்ளக்குறிச்சி பகுதியில் சிட்டுக்குருவிக்காக தனது மொபட்டையே ஒருவர் தியாகம் செய்த நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பி.எஸ்.கே.நகரை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் ஜெயகாந்தன் (வயது55). ஆசிரியர் கூட்டுறவு சங்க செயலாளர். இவர் கடந்த 25 நாட்களுக்கு முன்பு தனது வீட்டின் முன்பு மொபட்டை நிறுத்தி இருந்தார்.
மறுநாள் காலையில் எழுந்து வந்து பார்த்த போது மொபட்டின் கைப்பிடியின் கீழே உள்ள பெட்டியில் சிட்டுக்குருவி ஒன்று கூடு கட்டியிருப்பதை பார்த்தார்.
சிட்டுக்குருவி கூடு கட்டியிருப்பதை தூக்கி எறிய மனம் இல்லாத அவர், அதனை அப்படியே விட்டு விட்டார். சிட்டுக்குருவிக்காக அந்த மொபட்டை பயன்படுத்தாமல் தான் நிறுத்தியிருந்த இடத்திலேயே விட்டு விட்டார்.
இதையடுத்து சிட்டுக்குருவி அந்த மொபட்டை ஒரு வீடு போல கருதி, தனது கூட்டை அங்கு வைத்து பயன்படுத்தி வந்தது. கிறிஸ்டோபர் ஜெயகாந்தனும் அந்த கூட்டை எப்போதும் கண்காணித்து வந்தார்.
இந்த நிலையில் அந்த சிட்டுக்குருவி 2 முட்டைகளை இட்டு அடைகாத்து வந்தது. கடந்த 5-ந் தேதி அதில் ஒரு முட்டை குஞ்சு பொரித்தது. இதையடுத்து தினமும் சிட்டுக்குருவி தனது குஞ்சுக்கு அவ்வப்போது இரையை கொண்டு வந்து கொடுத்து செல்கிறது.
இது குறித்து கிறிஸ்டோபர் ஜெயகாந்தன் கூறியதாவது:-
எனது மொபட்டை வீட்டின் படிக்கட்டுக்கு கீழே நிறுத்தி இருந்தேன். அதில் சிட்டுக்குருவி கூடு கட்டியதை பார்த்தேன். அதை பார்த்ததும் சிட்டுக்குருவியை, குஞ்சுகளை, தாய்க்குருவியை பறிக்க கூடாது என வேதாகமத்தில் கூறியுள்ளது. அந்த வசனம் எனக்கு நினைவுக்கு வந்தது.
எனவே மொபட்டை எடுக்காமல் அதே இடத்தில் நிறுத்தி விட்டேன். கூடு கட்டிய நாள் முதல் தினமும் காலையில் எழுந்தவுடன் அந்த கூட்டையும், முட்டையையும், குஞ்சுகளையும் தொடர்ந்து கவனித்து வருகிறேன். இது எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. ஒரு நாளும் அந்த மொபட்டை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது இல்லை. இன்னொரு முட்டையும் குஞ்சு பொரித்து குஞ்சுகள் வெளியே பறந்து செல்லும் வரை காத்திருப்பேன். இந்த சிட்டுக்குருவி எனது மொபட்டில் கூடு கட்டியது எனக்கு மகிழ்ச்சி அளிப்ப தாக உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சிட்டுக்குருவிக்காக தனது ஸ்கூட்டரையே விட்டுக் கொடுத்து தியாகம் செய்த கிறிஸ்டோபர் ஜெயகாந்தனின் மனித நேயத்தை அப்பகுதி மக்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.