தவெக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று முன் தினம் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் தொடர்ந்து நேற்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். அதன் தொடர்ச்சியாக இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இதில் அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது,
"மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் பட்ஜெட்டாக இல்லை. நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி மக்கள் நலத்திட்டங்களை நிறுத்த கூடாது.
மக்களின் கவனக்குறைவால் ஆட்சி பீடத்தில் தவெக அரசு உள்ளது. நிதி பற்றாக்குறை இருப்பது தெரிந்து தான் வாக்குறுதி அளித்தீர்கள்.
நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து தவெக மக்களை ஏமாற்றி உள்ளது. வேளாண் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
சிறுகுறு விவசாயிகள் கடனை கட்டமுடியாமல் தவித்து வருகின்றனர். சிறுகுறு விவசாயிகளிடம் பாகுபாடு செய்வது ஏற்புடையதல்ல. விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
அம்மா மற்றும் எடப்படியார் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட எண்ணற்ற திட்டங்களுக்கு இந்த ஆட்சியில் வெற்றி திட்டம் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது.
மாற்றம் மாற்றம் என்றீர்கள். இதுதான் மாற்றமா? பள்ளி கல்வித்துறைக்கு நிதி குறைக்கப்பட்டுள்ளது,
அம்மா ஆட்சியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மிதிவண்டிகள் திட்டம், நவீன பிராண்டட் மிதிவண்டிகள் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் தொடர்ந்து வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி திட்டத்திற்கு வெற்றி மடிக்கணினி திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் வழங்கப்பட்ட மகளிர்களுக்கான விலையில்லா ஆடுகள் வழங்கிய திட்டத்திற்கு வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டம் என மாற்றப்பட்டுள்ளது" என கூறினார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், ஸ்டிக்கர் என்ற வார்த்தை அவைகுறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவித்தார்.
இதன்பின் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "எங்கள் ஆட்சியில் நல்ல திட்டங்களை வரவேற்று அதை அப்படியே செயல்படுத்தி உள்ளோம். அம்மா உணவகத்தைப் பெயர் மாற்றாமல் அப்படியே வைத்துள்ளோம்.
நிதி ஒதுக்கி இன்று ஒவ்வொரு தெருவிலும் அம்மா உணவகம் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
கடந்த 5 ஆண்டுகளில் அது எப்படி நடந்தது என்பது உங்களுக்கு தெரியும் " என்றார்.
இதற்கு பதிலளித்த திமுக எம்எல்ஏ கே. நெஹ்ரு, "அம்மா உணவகத்தித்கு கடந்த ஆட்சி எவ்வளவு செலவு செய்துள்ளோம் என கணக்கு பார்த்தால் தெரியும். மாவட்ட வாரியாக கணக்குகள் உள்ளன. பேரிடர் காலத்தில் பயன்படுத்தப்பட்டது." என்றார்.
இதன்பின் வேலுமணி, இபிஎஸ் ஆட்சியில் அம்மா உணவகத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டதாகவும், கடந்த திமுக ஆட்சியில் அம்மா உணவகம் சிறப்பாக செயல்படவில்லை என கூறினார்.
அப்போது, அவர் தவறான தகவலை கூறுவதாகவும், அம்மா உணவகத்திற்கான நிதி நகராட்சிகளில் இருந்து தான் செல்கிறது, தனியே நிதி ஒதுக்கப்படுவதில்லை என தெரிவித்தார்.
விவாதம் தொடர, இபிஎஸ் எழுந்து, பழைய திட்டங்களுக்கு பெயர் மாற்றுவதால் தான் இந்த பிரச்சனையே வருகிறது" என்று சுருக்கமாக கூறி முடித்தார்.
இதற்கு பதில் சொன்ன அமைச்சர் செங்கோட்டையன், கடந்த ஆட்சிகளிலும் பெயர் மாற்றங்கள் பரவலாக நிகழ்ந்துள்ளன என கூறினார்.