தமிழக செய்திகள்

காலம் வைக்கும் புள்ளியை அழிக்க இயலாது.. எஸ்.பி. வேலுமணியிடம் பேசியது குறித்து செங்கோட்டையன் விளக்கம்

மன்னிக்கும் தன்மை, பெருந்தன்மை இல்லாத தலைமை நீடித்த வரலாறு இல்லை.

பொள்ளாச்சியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் அமைச்சர் செங்கோட்டையனை எஸ்.பி. வேலுமணி சந்தித்து பேசியது அதிமுக வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது.

செங்கோட்டையன் பதில்

இந்நிலையில் இந்த சந்திப்பு குறித்து இன்று கோவையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த செங்கோட்டையன், “பொள்ளாச்சியில் நடைபெற்ற திருமணம், உறவு முறையில் இருவருக்கும் வேண்டிய திருமணம். நானும் சென்றிருந்தேன், எஸ்.பி. வேலுமணியும் வந்திருந்தார்.

எங்களது கழக நிர்வாகிகளும் வந்திருந்தார்கள். எல்லோருமே அங்கு அருகாமையில் இருந்தோம். இருவரும் சும்மா அமர்ந்து கருத்துக்கள் பேசிக் கொண்டிருந்தோம். அரசியல் பேசவில்லை” என்றார்.

மேலும், " எடப்பாடி தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஒவ்வொருவராக வெளியேற்றுகிறார். ஆனால், காலத்தை எதிர்த்து உங்களால் போரிட முடியாது. காலம் வைக்கின்ற புள்ளியை அழிக்க இயலாது" என்றார் .

வரலாறு இல்லை

2 கோடி தொண்டர்களில் எஸ்.பி.வேலுமணியும் ஒருவர்தான் என்று எடப்பாடி பழனிசாமி பேசியது குறித் கேள்விக்கு பதிலளித்த செங்கோட்டையன், “2 கோடி தொண்டர்கள் இல்லை என்று கூறவில்லை. எஸ்.பி.வேலுமணி முக்கியப் பொறுப்பாளராக இருந்து, ஒருவர் முதலமைச்சராகவும் பொதுச்செயலாளராகவும் வருவதற்கு உறுதுணையாக இருந்தவர்.

இதனை மறந்து தற்போது பேசிக் கொண்டிருக்கிறார். காலம் அவருக்குப் பதில் சொல்லும். மன்னிக்கும் தன்மை, பெருந்தன்மை இல்லாத தலைமை நீடித்த வரலாறு இல்லை. அது பழனிசாமிக்கும் ஏற்படும்” என்று கூறினார்.

எடப்பாடி வேறு

மேலும், "எடப்பாடி பழனிச்சாமியை பல்வேறு நிலைகளை ஆட்சிக்கு வர வேண்டும் என துடிக்கிறார். எம்.ஜி.ஆர் ஜெயலலிதா வழியில் வந்த இயக்கம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்று மக்கள் கேட்கின்றனர். பொதுவாக புரட்சித்தலைவர் வேறு.. புரட்சித்தலைவி வேறு.. எடப்பாடி வேறு.. இதை அவர் புரிந்து கொண்டால் சரி” என்று கூறினார்.

SCROLL FOR NEXT