தமிழகத்தில் அடுத்தடுத்து மழைப்பொழிவு எப்படி இருக்கும் என்பது பற்றி தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இன்று அதிகாலை 4 மணியளவில் முரசு புயலின் முன்பகுதி ஓங்கோல் அருகே கரையை கடக்க தொடங்கியது. காலை 7 மணியளவில் மையப்பகுதி முழுமையாக கரையை கடந்தது. அதன் பிறகு புயலின் பின்பகுதி கடந்தது. காலை 9 மணிளவில் இது முழுமையாக கரையை கடந்தது. அது கரையை கடக்கும்போது புயலின் வேகம் 110 கி.மீ. அளவுக்கு பதிவாகி உள்ளது. இந்த புயல் வலுப்பெற்றே கரையை கடந்தது.
அடுத்த 24 மணி நேரத்தில் புயல் முழுமையாக வலுவிழக்கும்.
ஆந்திராவில் கரையை கடந்துள்ள புயல் அரபிக்கடல் காற்றை ஈர்த்து இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய மழை பொழிவு ஆங்காங்கே கொடுக்கும்.
இதன் பிறகு ஈரப்பதம் மிகுந்த கிழக்கு திசை காற்று காரணமாக வருகிற 5-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை (தீபாவளி பண்டிகையையொட்டி கால கட்டங்களில்) மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.
கடலோர மாவட்டங்களில் அதிகாலை மற்றும் மாலை நேரங்களிலும், மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் இரவு நேரங்களிலும் மழை பெய்யும். இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாத மழையாக, சீராக பெய்யும். தீபாவளி பண்டிகையை பாதிக்கும் மழையாக இந்த மழை இருக்காது. இடையூறு கொடுக்கும் மழையாகவே இருக்கும்.
வருகிற 10-ந்தேதிக்கு பிறகு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, பருவமழை தீவிரமடையும். இயல்பாக நவம்பர் மாதம் 18 செ.மீ. அளவுக்கு மழை பதிவாகும். இது இந்தாண்டு 22 செ.மீ. அளவுக்கு மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் பிறகு உருவாகும் தாழ்வு பகுதியும் தமிழகத்துக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும். டிசம்பர் 20-ந்தேதி வரை வடகிழக்கு பருவமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே அடுத்தடுத்த நாட்களில் மழை பொழிவு எப்படி இருக்கும் என்று இந்திய வானிலை மையமும் கணித்துள்ளது.
இன்று ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பல இடங்களில் கனமழையும், மேலும் பல இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (4-ந்தேதி) ஆந்திர கடலோர பகுதிகளிலும், கர்நாடகா, கேரளா, மாகே, ஒடிசா, தெலுங்கானா பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், 5-ந்தேதி கர்நாடகா, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
6-ந்தேதி அன்றும் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், 7-ந்தேதியும் மழையின் தாக்கம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.