அரசியல் பொதுவெளியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தும் முன் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஒருமுறைக்கு இருமுறை யோசித்து பேச வேண்டும்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுகந்தியை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கலந்துகொண்டு உரையாற்றினார். பிரசாரத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக வெற்றிக் கழக அரசிற்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இடையே ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எழுந்துள்ள விவாதங்கள் குறித்து தனது கருத்தை பதிவு செய்தார்.
முன்னதாக, மதுராந்தகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறையில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து கம்யூனிஸ்டுகள் பதிலளிக்க வேண்டும் என்றும், "திமுக ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை என கம்யூனிஸ்டுகளால் நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியுமா? என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய வீரபாண்டியன், “அரசியல் பொதுவெளியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தும் முன் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஒருமுறைக்கு இருமுறை யோசித்து பேச வேண்டும். அவருக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நீண்டகாலப் போராட்ட வரலாற்றைப் புரட்டிப் பார்க்க வேண்டும். அதை அவர் படித்துத் தெரிந்துகொள்வதோடு நிறுத்தாமல், முதலமைச்சர் விஜய்யிடமும் எடுத்துக் கூற வேண்டும்” என காரசாரமாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்தில் ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசை எந்தவொரு சூழலிலும் கவிழ்க்க வேண்டும் என்ற சிந்தனையோ அல்லது எண்ணமோ கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குக் கிடையாது” என்று தெளிவுபடுத்தினார். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நேர்மையைப் பற்றிக் குறிப்பிட்ட வீரபாண்டியன், “இத்தனை ஆண்டு கால அரசியல் வரலாற்றில் எந்தவொரு நீதிமன்றத்திலும் ஊழல் குற்றச்சாட்டுக்காக கம்யூனிஸ்டுகள் தண்டிக்கப்பட்டதாக வரலாறு இல்லை. கம்யூனிஸ்ட் கட்சியினர் எந்தக் காலத்திலும் லஞ்சம் பெற்றதும் இல்லை, பிறர் லஞ்சம் வாங்குவதையோ அல்லது ஊழல் புரிவதையோ வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்ததும் இல்லை” எனக் கூறி ஆதவ் அர்ஜுனாவின் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.