

திமுக ஆட்சிக் காலத்தில் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் அமைச்சராக பதவி வகித்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.3 கோடி அளவுக்கு சொத்து சோ்த்ததாக புகார் செய்யப்பட்டது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி, திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006 முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் அமைச்சராக பதவி வகித்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.3 கோடி அளவுக்கு சொத்து சோ்த்ததாக அவா் மீதும், அவரது மனைவி, மகன் மீதும் ஊழல் தடுப்புத்துறை கடந்த 2011-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், 2016-ஆம் ஆண்டு அவர்களை வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டது. இந்த விடுதலை உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கீழ் நீதிமன்றம் அளித்த விடுதலை உத்தரவை ரத்து செய்து, வழக்கின் விசாரணையை மீண்டும் தொடருமாறு உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி வழக்கு விசாரணை மீண்டும் தொடரப்பட்ட நிலையில், வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மீண்டும் தாக்கல் செய்த மனுவை கீழ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து திமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவிக்க கோரிய மனுவையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை சமர்ப்பித்துள்ள சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணையைத் தாமதமின்றி விரைந்து நடத்தி முடிக்குமாறு சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.