தமிழக செய்திகள்

தமிழ்நாட்டில் சேவல் சண்டைக்கு தடை விதிக்கப்படவில்லை - உயர் நீதிமன்றத்தில் டிஜிபி விளக்கம்!

தடை இல்லாததால், மனுதாரர் காவல்துறையிடமே அனுமதி பெறலாம் என நீதிபதி உத்தரவு.

சேவல் சண்டைக்கு தடைவிதிக்க காவல்துறை தலைமை இயக்குநருக்கு என்ன அதிகாரம் உள்ளது? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், தடை விதிக்கவில்லை, மாறாக அதனை முறைப்படுத்த சுற்றிறிக்கையே விடப்பட்டிருந்தது என தமிழ்நாடு காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

சேவல் சண்டை

தமிழ்நாட்டில் சேவல் சண்டைக்கு தடை விதித்து கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பரில் அப்போதைய காவல்துறை தலைமை இயக்குநர் சுற்றறிக்கை பிறப்பித்தார்.

இந்தநிலையில், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் கோயில் திருவிழாக்களில் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கக் கோரி ஈரோடைச் சேர்ந்த ஆர்.அருண்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், "கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்களின்போது, ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை, ரேக்ளா பந்தயங்கள் உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.

போலீசார் விதிக்கும் நிபந்தனைகளப் பின்பற்றியே தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் சூதாட்டம் இல்லை. விலங்குகள் துன்புறுத்தப்படுவதும் இல்லை.

எனவே, சேவல் சண்டைக்கு தடை விதித்து டிஜிபி பிறப்பித்துள்ள சுற்றறிக்கையை ரத்து செய்து, சேவல் சண்டை போட்டிகளை நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

என்ன அதிகாரம்?

இந்த மனு இம்மாத தொடக்கத்தில் நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாட்டில் சேவல் சண்டைக்கு தடை விதித்து சுற்றறிக்கை பிறப்பிக்க டிஜிபிக்கு என்ன அதிகாரம் உள்ளது?

போலீசுக்கு எத்தனையோ பணிகள் இருக்கும்போது, ஆடு சண்டை எங்கே நடக்கிறது? சேவல் சண்டை எங்கே நடக்கிறது? என கண்காணிப்பதுதான் வேலையா? என கேள்வி எழுப்பினார்.

மேலும் இந்த மனுவுக்கு பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணை ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்ததார்.

டிஜிபி விளக்கம்

இந்நிலையில் இன்று இம்மனுமீதான விசாரணை மீண்டும் நடைபெற்றது. அப்போது டிஜிபி தரப்பில், சேவல் சண்டைக்கு தடைவிதித்து சுற்றறிக்கை அனுப்பப்படவில்லை என்றும், மாறாக அப்போட்டியை முறைப்படுத்தவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டது எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து தடை இல்லாததால், மனுதாரர் காவல்துறையிடமே அனுமதி பெறலாம் என நீதிபதி உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT