

சேவல் சண்டைக்கு தடை விதிக்க காவல்துறை தலைமை இயக்குநருக்கு என்ன அதிகாரம் உள்ளது? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் சேவல் சண்டைக்கு தடை விதித்து கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பரில் அப்போதைய காவல்துறை தலைமை இயக்குநர் சுற்றறிக்கை பிறப்பித்தார்.
இந்தநிலையில், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் கோயில் திருவிழாக்களில் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கக் கோரி ஈரோடைச் சேர்ந்த ஆர்.அருண்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்களின்போது, ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை, ரேக்ளா பந்தயங்கள் உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.
போலீசார் விதிக்கும் நிபந்தனைகளப் பின்பற்றியே தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் சூதாட்டம் இல்லை. விலங்குகள் துன்புறுத்தப்படுவதும் இல்லை.
எனவே, சேவல் சண்டைக்கு தடை விதித்து டிஜிபி பிறப்பித்துள்ள சுற்றறிக்கையை ரத்து செய்து, சேவல் சண்டை போட்டிகளை நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில், மிருக வதை தடை சட்டம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வு பிறப்பித்த பல்வேறு உத்தரவுகளின் அடிப்படையில்தான் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் நிலுவையில் உள்ளது. இந்த மனுவுக்கு பதிலளிக்க 2 வாரம் அவகாசம் வேண்டும் என்று கேட்கப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதி, தமிழ்நாட்டில் சேவல் சண்டைக்கு தடை விதித்து சுற்றறிக்கை பிறப்பிக்க டிஜிபிக்கு என்ன அதிகாரம் உள்ளது?
போலீசுக்கு எத்தனையோ பணிகள் இருக்கும்போது, ஆடு சண்டை எங்கே நடக்கிறது? சேவல் சண்டை எங்கே நடக்கிறது? என கண்காணிப்பதுதான் வேலையா? என கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து இந்த மனுவுக்கு பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை செப்.7ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.