நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் தொடர்ந்து 3-வது நாளாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொடர்ச்சியான தென்மேற்கு பருவமழையால் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது. கனமழை காரணமாக தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. முதல் மைல் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. குச்சிமுச்சி பகுதியில் தரைப்பாலம் முழ்கும் அளவுக்கு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட கீழ்நாடுகாணி குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து மண்சரிவு ஏற்பட்டு வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
பந்தலூர் பகுதியில் உள்ள பொன்னானி மற்றும் சோலாடி ஆறுகளில் நீர்வரத்து வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக பொன்னானி ஆற்றின் கரையோரங்களில் அமைந்துள்ள கிராம மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
வெள்ள அபாயம் ஏற்பட்டால் உடனடியாக வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கும், நிவாரண முகாம்களுக்கும் செல்ல வேண்டும் என்றும், ஆற்றங்கரைகளுக்கு செல்லக்கூடாது, வெள்ளநீரைக் கடக்க முயற்சிக்கக் கூடாது, உயரமான மரங்களின் கீழ் நிற்பதைத் தவிர்க்க வேண்டும், வாகனங்களை தாழ்வான பகுதிகளில் நிறுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பள்ளி மாணவர்கள், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பந்தலூர் தாசில்தார் தலைமையில் வருவாய்த் துறை, பேரிடர் மேலாண்மை, காவல்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மழை நீடிக்கும் வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை பின்பற்றி தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் 2 பெரிய மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால் சாலையில் இருபுறமும் வாகனங்கள் நீண்ட நேரம் அணிவகுத்து நின்றன. மரங்கள் வெட்டி அகற்றப்பட்டதையடுத்து போக்குவரத்து படிப்படியாக சீரமைக்கப்பட்டது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால், மலைப்பாதைகளில் பயணம் மேற்கொள்ளும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.